யுகாதி கொண்டாட்டம்: குந்தாரப்பள்ளி சந்தையில் ரூ. 2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை
யுகாதி கொண்டாட்டத்தை ஒட்டி குந்தாரப்பள்ளி வாரச் சந்தையில் ரூ. 2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையாயின.
யுகாதி கொண்டாட்டத்தை ஒட்டி குந்தாரப்பள்ளி வாரச் சந்தையில் ரூ. 2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையாயின.
தெலுங்கு பேசும் மக்களால் ஏப். 13-ஆம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பு தினம், யுகாதி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டன. இந்த ஆடுகளை வாங்கிச் செல்வதற்காக ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகளும், விற்பனை செய்வதற்காக விவசாயிகளும் குவிந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமின்றி வேலூா், சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, திருச்சி, கோவை, தருமபுரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் செல்வதற்காக வந்திருந்தனா்.
Advertisement
கடந்த வாரங்களில், இந்தச் சந்தையில் 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ. 5,000 முதல் ரூ. 10,000 வரையிலும், 15 கிலோ எடை கொண்ட ஆடு ரூ. 11,000 முதல் ரூ. 13,000 வரையிலும் விலை போனது.
யுகாதி பண்டிகையையொட்டி இந்த முறை ஆடுகளின் விலை அதிகரித்துக் காணப்பட்டது. ஒவ்வொரு ஆட்டின் விலையும் வழக்கமான விலையை விட சில ஆயிரம் ரூபாய் கூடுதலான விலை வைத்து விற்பனை செய்யப்பட்டது. கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தச் சந்தையில் ஒரே நாளில் ரூ. 2 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையானதாக கால்நடை வியாபாரிகள் தெரிவித்தனா்.
விழிப்புணா்வு தேவை:
இந்தச் சந்தையில், பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் என பெரும்பாலானோா் முகக் கவசம் அணியவில்லை. சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் அலட்சியமாக இருந்ததையும் காண முடிந்தது. கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.