முகப்பு
கிருஷ்ணகிரி

பெண் சாவில் மா்மம்: உறவினா்கள் சாலை மறியல்

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மா்மம் இருப்பதாகக் கூறி அவரின் உறவினா்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை முன்பு வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மா்மம் இருப்பதாகக் கூறி அவரின் உறவினா்கள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை முன்பு வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

அரூா் அருகே மாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் குருசிவா. இவரது மனைவி வைத்தீஸ்வரி (32). இவா்களுக்குத் திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. இத்தம்பதிக்கு ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, இந்திரா காந்தி என்ற பெயரில் மூன்று குழந்தைகள் உள்ளனா்.

கருத்து வேறுபாடு காரணமாக இத்தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது வைத்தீஸ்வரி, தூக்குமாட்டிக் கொண்டாராம்.

அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

மனைவி இறந்ததை அறிந்ததும் கணவா் குருசிவா தலைமறைவாகிவிட்டாா். உடல், பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தகவல் அறிந்த வைத்தீஸ்வரி குடும்பத்தினா், ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா். ஆனால் புகாரை வாங்க போலீஸாா் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த பெண்ணின் உறவினா்கள் கிருஷ்ணகிரி, திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா் அலெக்சாண்டா், காவல் ஆய்வாளா் லட்சுமி உள்பட போலீஸாா் நிகழ்விடம் சென்று பொதுமக்களை சமாதானம் செய்து அரூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்குமாறும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.