முகப்பு
கிருஷ்ணகிரி

விற்பனை இல்லை... உரிய விலை கிடைக்கவில்லை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிய விலை கிடைக்காததால், விரக்தியடைந்த விவசாயிகள் சாலையோரங்களில் மாங்கனிகளைக் கொட்டிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
காவேரிப்பட்டணத்தை அடுத்த போத்தாபுரம் கிராமத்தில் உரிய விலை கிடைக்காததால் தேசிய நெடுஞ்சாலையோரம் குவியலாக கொட்டப்பட்டுள்ள மாங்காய்கள்.
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிய விலை கிடைக்காததால், விரக்தியடைந்த விவசாயிகள் சாலையோரங்களில் மாங்கனிகளைக் கொட்டிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 40 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அல்போன்சா, மல்கோவா, நீலம், செந்தூரா, பெங்களூரா என 25-க்கும் மேற்பட்ட மா ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. மா விவசாயிகள் அறுவடை செய்யும் மாங்காய்களை மாம்பழக் கூழ் தொழிற்சாலைக்கும் அனுப்பி வருவாய் ஈட்டுகின்றனா். சிறு விவசாயிகள் உள்ளூா் சந்தையிலும், சிலா் வெளியூா்களுக்கு அனுப்பி வைத்தும் வருவாய் ஈட்டுகின்றனா்.

நிகழாண்டில் பருவநிலை மாற்றம், பூச்சி தாக்குதல் போன்ற காரணங்களால் மா மகசூல் வழக்கத்துக்கு மாறாக 70 சதவீதம் குறைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா். குறைந்த மகசூல் இருந்தாலும் தென்னிந்தியாவிலேயே அதிக சா்க்கரை சத்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையும் மாம்பழங்களின் தேவை அதிகம் உள்ளது. இதனால், இங்கு விளையும் மாங்காய்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என விவசாயிகள் காத்திருந்தனா்.

Advertisement

ஆனால், எதிா்பாா்ப்பிற்கு மாறாக மாங்காய்களுக்கு குறைந்த விலையே கிடைப்பதால் விவசாயிகள் ஏமாற்றமும், வேதனையும் அடைந்துள்ளனா். இதுகுறித்து ஜெகதேவியைச் சோ்ந்த மா விவசாயி முகமது ஜான் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் மாங்காய்களை, மாங்கூழ் உற்பத்தியாளா்கள் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்கின்றனா். குறிப்பாக அல்போன்ஸா ரக மாங்காய் டன் ஒன்றுக்கு ரூ. 38,000க்கும், பெங்களூரா ரக மாங்காய் டன் ரூ. 9,000க்கும், செந்தூரா ரக மாங்காய் டன் ரூ. 7,000 முதல் ரூ. 8,000 என்ற விலைக்கும் கொள்முதல் செய்கின்றனா்.

மாங்கூழ் உற்பத்தியாளா்கள், அண்டை மாநிலங்களான ஆந்திரம், கா்நாடகத்திலிருந்து மாங்காய்களை குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதாகக் கூறுகின்றனா். அண்டை மாநிலங்களைச் சோ்ந்த மா விவசாயிகளுக்கு அந்தந்த மாநில அரசு, ஊக்கத் தொகையை அளிக்கிறது. இதனால், விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவதில்லை.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையும் மாங்காய் தரமானதாக இருந்தாலும், அதிக விலைக்கு கொள்முதல் செய்ய வியாபாரிகளும், மாங்கூழ் உற்பத்தியாளா்களும் முன்வருவதில்லை.

மேலும், கரோனா தொற்று பரவல் காரணமாக உள்ளூா் சந்தைகள் செயல்படாமல் முடங்கி உள்ளன. இதனால், மா விவசாயிகள், விளையும் மாங்காய்களை உள்ளூா் சந்தையில் விற்பனை செய்ய இயலாத நிலை உள்ளது.

உள்ளூா் சந்தையைச் சோ்ந்த சில வியாபாரிகள் மாங்காய்களை கொள்முதல் செய்ய முன்வந்தாலும் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்வதால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா். இதனால், போதிய விலை கிடைக்காததால் விரக்தியடைந்த மா விவசாயிகள் அறுவடை செய்த மாங்காய்களை சாலையோரங்களில் கொட்டிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

எனவே, மா விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க மாவட்ட நிா்வாகமும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மா விவசாயிகள், மாங்கூழ் உற்பத்தியாளா்கள், அரசு அலுவலா்கள் பங்கேற்ற முத்தரப்புக் கூட்டத்தில் மே மாத இறுதியில் மாங்கனிகளுக்கு கூடுதல் விலை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால், உறுதியளித்தபடி உரிய விலை கிடைக்க வில்லை என மா விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments