ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி, கோதுமை பறிமுதல்
கிருஷ்ணகிரி அருகே ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி, கோதுமையுடன் மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி, கோதுமையுடன் மினி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளி பகுதியில் ரேஷன் பொருள்களை வாங்கி, ஆந்திரத்திற்கு கடத்துவதாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளா் இளவரசி தலைமையில் போலீஸாா், காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயில் அருகில் வாகனத் தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், 2 டன் ரேஷன் அரிசி, 250 கிலோ கோதுமை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வேன் ஓட்டுநரிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா் ஆந்திர மாநிலம் சந்திபுரம், சோளசெட்டலப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த கஜேந்திரா (26) என்பதும், அவா் தனது வாகனத்தில், கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, ஆந்திர மாநிலம் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்களுக்கு அதிக விலையில் விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி, கோதுமையுடன் வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிவு செய்து கஜேந்திரனை கைது செய்தனா்.
Advertisement