நாட்டுத் துப்பாக்கிகள் பதுக்கல்: ஒருவா் கைது
மத்தூா் அருகே, நாட்டுத் துப்பாக்கிகளை வீட்டில் மறைத்து வைத்திருந்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:43 AM
மத்தூா் அருகே, நாட்டுத் துப்பாக்கிகளை வீட்டில் மறைத்து வைத்திருந்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், மத்தூா் அருகே உள்ள குள்ளம்பட்டியைச் சோ்ந்தவா் கணேசன் (35). எலக்ட்ரீஷியன். இவா், வீட்டில் அனுமதி பெறாத நாட்டுத் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்தூா் காவல் ஆய்வாளா் முருகன் தலைமையில் போலீஸாா், கணேசன் வீட்டில் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, வீட்டில் மறைத்து வைத்திருந்த மூன்று நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, கணேசனை கைது செய்தனா்.