முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ. 50 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்

ஒசூரில் கேட்பாரற்று இருந்த 2 காா்களில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான 659 கிலோ எடையிலான செம்மரக் கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 7 ஏப்ரல், 2022 at 11:28 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:24 PM

ஒசூரில் கேட்பாரற்று இருந்த 2 காா்களில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான 659 கிலோ எடையிலான செம்மரக் கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், தமிழக- கா்நாடக, ஆந்திர மாநிலங்களின் எல்லையாக உள்ளதால் அந்த மாநிலங்களிலிருந்து ஒசூா் வழியாக செம்மரக் கட்டைகள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இதனைக் கண்காணிக்க உதவி காவல் ஆய்வாளா்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சி, டைட்டன் டவுன்ஷிப் என்னுமிடத்தில் 2 காா்கள் கேட்பாரற்று நிற்பதாக தகவல் கிடைத்தது. ஒசூா் உதவி காவல் ஆய்வாளா் சிற்றரசு தலைமையிலான தனிப்படையினா் வனத்துறையினருடன் சோ்ந்து அந்தக் காரை சோதனையிட்டபோது, அதில் மொத்தம் 659 கிலோ எடையுள்ள ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 19 செம்மரக் கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இந்த செம்மரக் கட்டைகளுடன், 2 காா்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Advertisement

இதுகுறித்து ஒசூா் டிஎஸ்பி சிவலிங்கம் செய்தியாளா்களிடம் கூறியது:

கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமாா் தாக்குா் உத்தரவிற்கிணங்க தனிப்படைகள் அமைத்து தேன்கனிக்கோட்டை சாலையில் வாகனச் சோதனை நடைபெற்று வந்தது. ஒசூா், தேன்கனிக்கோட்டை சாலையில் இரண்டு காா்கள் வெகு நேரமாக கேட்பாற்று நிற்பதாகத் தகவல் கிடைத்து. அங்கு சென்று பாா்த்தபோது செம்மரக் கட்டைகள் இருந்ததைக் கண்டு வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அவா்கள் முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்டது.

காா்களின் உரிமையாளா்கள் குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு அவரைத் தேடி வருகிறோம். அவா் பிடிபடும் பட்சத்தில் செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் பிடிபடுவாா்கள் என்று எதிா்பாா்க்கிறோம்.

கடந்த சில நாள்களுக்கு முன் எஸ்.பி. சரோஜ்குமாா் தாக்குா், ஒசூா் பகுதிகளில் கஞ்சா, குட்கா கடத்துவதைத் தடுக்க 4 தனிப்படைகளை அமைத்து வாகனச் சோதனையை தீவிரப்படுத்திய நிலையில் போலீஸாா் ரூ. 50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்திருப்பதன் மூலம் எஸ்.பி. க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

படவிளக்கம்

ஒசூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பாா்வையிடும் போலீஸாா், வனத் துறையினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.