நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!
நாதக சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது பற்றி...
சென்னை: ஜனதா கட்சியின் ஏர் உழவன் சின்னத்தைப் போல இருக்கும் விவசாயி சின்னத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சிக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்கி இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஏர் உழவன் சின்னம் போல காட்சியளிக்கும் விவசாயி சின்னத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சிக்கு தடை விதிக்கக் கோரி ஜனதா கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் கட்சி தரப்பில், தேசிய கட்சியான ஜனதா கட்சி, 1977 -ஆம் ஆண்டு முதல் ஏர் உழவன் சின்னத்தை பயன்படுத்தி வருகிறது. தங்கள் சின்னத்தைப் போல நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தோம். அந்த மனு பரிசீலிக்கப்படவில்லை என வாதிடப்பட்டது.
தேர்தல் ஆணையம் தரப்பில், ஜனதா கட்சி தற்போது அங்கீகாரத்தை இழந்து விட்டதால், ஏர் உழவன் சின்னத்தை தக்க வைத்துக்கொள்ள அந்த கட்சிக்கு எந்த உரிமையும் இல்லை. உச்ச நீதிமன்றமும் இதை சுட்டிக்காட்டி உத்தரவு பிறப்பித்துள்ளதாக வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏற்கெனவே அங்கீகாரத்தை இழந்த கட்சிக்கு சின்னத்தை தக்க வைக்க உரிமையில்லை என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, ஜனதா கட்சியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Petition Challenging Naam Tamilar Katchi's Symbol Dismissed!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.