முருகப்பெருமான் வடக்கே பிறந்தவரா? ஜூனியர் என்டிஆர் படத்துக்கு சீமான் எதிர்ப்பு
நடிகர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தில் முருகப்பெருமானை வடக்கே பிறந்தவர் எனக் குறிப்பிட்டதற்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து...
நடிகர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தில் முருகப்பெருமானை வடக்கே பிறந்தவர் எனக் குறிப்பிட்டதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் புதிதாக பான் இந்தியா படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தில் முருகப்பெருமானை மையமாக வைத்து கதைக்கரு இருக்கும் என கூறப்படுகிறது. இதனிடையே, படத்தின் அறிவிப்பு குறித்து படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி வெளியிட்ட பதிவில் வடக்கே பிறந்தவர் எனக் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்க் கடவுளான முருகனை வட நாட்டில் பிறந்தவர் என நாக வம்சி குறிப்பிட்டதாக சமூக ஊடகங்களில் எதிர்ப்புகள் கிளம்பின.
Advertisement
Advertisement
இந்த நிலையில், வடக்கே பிறந்தவர் எனக் கூறும் என்டிஆர் படத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, "வணிகத்துக்காக தமிழர்களின் பெருமைமிகு அடையாளங்களில் கை வைப்பதை தமிழ்ப் பிள்ளைகள் நாங்கள் இனியும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.
ஆகவே, முருகப்பெருமான் வடபுலத்தில் பிறந்தார் என்பது போன்ற கட்டுக்கதைகளை உருவாக்கி அவற்றை கலை என்ற பெயரில் திரித்துத் திணிக்க முயல்வதை, படக்குழு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையென்றால் மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கின்றேன்.
தமிழினத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி இதே கருத்துருவாக்கத்தோடு இப்படம் உருப்பெற்று வெளிவந்தால் தமிழ்த் திரையரங்க உரிமையாளர்கள் இதனை தமிழ்நாட்டில் வெளியிட மாட்டோம் என்ற ஒருமித்த முடிவினை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால், தமிழ்நாட்டில் எந்தவொரு திரையரங்கிலும் இத்திரைப்படத்தைத் திரையிடவிடாது மிகப்பெரிய போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும். அப்படிப்பட்ட நிலைக்கு எங்களைத் தள்ளிவிட மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
தமிழ்ப் பண்பாட்டைத் திரித்து, தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்துடன் உருவாகும் இப்படம் வெளிவந்தால் கடும் சட்டம் - ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்பதைக் கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பையோ தெலுங்கு பதிப்பையோ திரையிட அனுமதிக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
Was Lord Murugan born in the North? NTK Leader Seeman opposes Jr NTR's film
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.