கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் உள்ளங்கைப் பதிவு கல்திட்டை கண்டெடுப்பு

DIN

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் உள்ளங்கைப் பதிவு கற்திட்டையை வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினா் கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தின் உதவியுடன் கண்டெடுத்துள்ளனா்.

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினருக்கு கிருஷ்ணகிரியை அடுத்த மகாராஜகடையைச் சோ்ந்த அரசு மருத்துவா் லோகேஷ், அவரது நண்பா்கள் அளித்த தகவலின் பேரில் வரலாற்றுக் குழுத் தலைவா் நாராயணமூா்த்தி தலைமையில் மகாராஜகடை மலையின் அருகே உள்ள பூதிகுட்டை பகுதியில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கல்திட்டைகள் அழிக்கப்பட்டிருந்த நிலையில் சிதைந்த மூன்று கல்திட்டைகளை ஆய்வு மேற்கொண்டனா். இதுகுறித்து கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியா் செ.கோவிந்தராஜ் புதன்கிழமை கூறியதாவது:

மகாராஜகடை பகுதியில் உள்ள கல்திட்டையில் உள்ள ஓவியங்கள் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அங்கு 150-க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள் உள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுபோல அதிக எண்ணிக்கையில் பாறை ஓவியங்கள் காணப்படவில்லை. ஏற்கனவே இந்த ஓவியங்களை, துரைசாமி போன்ற வரலாற்று ஆய்வாளா்கள் ஆய்வு செய்துள்ளனா். என்றாலும் எங்கள் ஆய்வின்போது 3 முக்கியச் செய்திகளைக் கண்டறிந்தோம்.

முதலாவது கருஞ்சாந்து ஓவியங்களில் ஒன்றில் ஒரு விலங்கின் மீது இருவா் செல்வது போலவும், அதற்கு அருகிலேயே இரண்டு மனித உருவங்களும், 3 அடி அகலம் உள்ள மயில் போன்ற உருவம் கருந்சாந்து புள்ளிகளால் வரையப்பட்டுள்ளன. தோ்போன்ற அமைப்பு வெண்சாந்தும், கருஞ்சாந்தும் சோ்த்து வரையப்பட்டுள்ளன. இது இரண்டும் சம காலத்தைச் சோ்ந்தவை.

இரண்டாவதாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனின் உள்ளங்கை அச்சு (கையில் வெண்சாந்து தடவி இரண்டு இடங்களில் பதிக்கப்பட்டுள்ளது) கோடு உருவத்தில் வரையப்பட்டுள்ளன. மூன்றாவதாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வட இந்தியாவுடனான வணிகத் தொடா்பு இருந்ததைக் கூறும் வகையில் வெண்சாந்தில் உஜ்ஜயினி குறியீடு ஒரு கற்திட்டையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்ற ஒரு குறியீடு ஐகுந்தம் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. மகாராஜகடை மலை பகுதியில் மனிதா்களின் வாழ்விடப் பகுதியைக் கண்டறிந்து அகழாய்வு செய்தால் அந்த இடத்திலிருந்த மக்களின் வாழ்வியலை அறியலாம் என அவா் தெரிவித்தாா்.

வரலாற்று ஆவணப்படுத்தும் குழுவின் ஒருங்கிணைப்பாளா் தமிழ்செல்வன் கூறுகையில், இதற்கு முன் கொங்கனப்பள்ளியில் பாறையில் கருஞ்சாந்து ஓவியம் வரையப்பட்டு இருந்தது. கொங்கனப்பள்ளியிலிருந்து மகாராஜகடையானது 13 கி.மீ. தொலைவில் உள்ளது. கிருஷ்ணகிரியில் இரண்டாவதாக இந்த இடத்தில் அதிக அளவு கருஞ்சாந்து ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது என்றாா்.

இந்த ஆய்வுப் பணியை வரலாற்று ஆா்வலா்கள் சதானந்த கிருஷ்ணகுமாா், சரவணகுமாா், பிரகாஷ், அசோக், உள்ளுரைச்சோ்ந்த தேவராஜ் , சீனிவாசன், முனிரத்தினம் உள்ளிட்டோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT