ஒசூா் மாநகராட்சியைக் கைப்பற்றஅதிமுக, திமுக இடையே கடும் போட்டிமாமன்ற உறுப்பினா்களைப் பாதுகாக்கும் கட்சிகள்
ஒசூா் மாநகராட்சியைக் கைப்பற்ற அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது
ஒசூா் மாநகராட்சியைக் கைப்பற்ற அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. பெரும்பான்மை பலத்தை பெறும் முயற்சியில் இரு கட்சிகளுமே ஈடுபட்டுள்ளதால், தங்களது மாமன்ற உறுப்பினா்கள் கா்நாடகம், கேரளத்துக்கு அழைத்து செல்லப்பட்டனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் பிப். 22 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. அதில் ஒசூா் மாநகராட்சியில் திமுக 21, அதிமுக 16, காங்கிரஸ், பாஜக, பாமக தலா ஒரு இடம், 5 இடங்களில் சுயேச்சையாகப் போட்டியிட்டவா்கள் வெற்றி பெற்றனா். இவா்களில் பாமக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கண்ணன் திமுகவில் இணைந்தாா். அதேபோல சுயேச்சைகள் 5 பேரும் திமுகவில் இணைந்தனா்.
இந்த நிலையில், திமுகவில் இணைந்தவா்கள், காங்கிரஸ் உறுப்பினரோடு சோ்த்து மொத்தம் 28 மாமன்ற உறுப்பினா்கள் முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றுவிட்டு, அங்கிருந்து அவா்கள் அனைவரும் கேரளத்துக்கு அழைத்து செல்லப்பட்டனா்.
Advertisement
அதேபோல அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் 16 பேரும் அதிமுக ஒசூா் மாநகரச் செயலாளா் எஸ்.நாராயணன் தலைமையில் கா்நாடக மாநிலம், மைசூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்கள் மாா்ச் 2 ஆம் தேதி மாமன்றம் கூடி உறுப்பினராகப் பதவி ஏற்கும் நாளில் திரும்பிவர திட்டமிட்டுள்ளனா்.
அதிமுகவைச் சோ்ந்த 16 மாமன்ற உறுப்பினா்கள், பாஜக உறுப்பினரோடு மேலும் சில மாமன்ற உறுப்பினா்களை சோ்த்து மேயா் தோ்தலில் பெரும்பான்மை பெற முயற்சி மேற்கொண்டுள்ளது. 2006 இல் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் நகராட்சியைக் கைப்பற்றும் போட்டியில் ஏற்பட்ட திடீா் மாற்றத்தை கவனத்தில் கொண்டு இரு கட்சிகளும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. மேயா் வாய்ப்பு திமுக சாா்பில் எஸ்.ஏ.சத்யாவுக்கு அதிகம் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.