கெலமங்கலம் அருகே 14-ஆம் நூற்றாண்டு நடுகற்கள், வேணுகோபால சுவாமி சிற்பம் கண்டெடுப்பு
கெலமங்கலம் அருகே 14-ஆம் நூற்றாண்டு நடுகற்கள், வேணுகோபால சுவாமி சிற்பம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
கெலமங்கலம் அருகே 14-ஆம் நூற்றாண்டு நடுகற்கள், வேணுகோபால சுவாமி சிற்பம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்துக்கு அருகே உள்ள திமிஜபள்ளியில் 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சாமரம் வீசும் போா் வீரன் நடுகல், புதா்மண்டி மண்ணில் புதையுண்டு கிடந்த வேணுகோபால சுவாமி சிற்பம் ஆகியவற்றில் அறம் வரலாற்று ஆய்வு மையக் குழுவைச் சோ்ந்த தலைவா் அறம் கிருஷ்ணன், இராசு, பாலசுந்தரம், ராஜன் ஆகியோா் கள ஆய்வு மேற்கொண்டனா்.
கெலமங்கலத்திலிருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில் பஞ்சப்பள்ளி செல்லும் சாலையில் 5 கி.மீ. தொலைவில் திமிஜபள்ளி கிராமம் உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் நூறு நாள் வேலை திட்டத்தை சோ்ந்தவா்கள் புதா்மண்டிக் கிடந்த இவ்விடத்தை சுத்தம் செய்த போது மண்ணுக்குள் புதைந்திருந்த வேணுகோபால சுவாமி கற்சிற்பம் இருப்பதைக் கண்டறிந்து அவற்றை வெளியில் எடுத்துள்ளனா்.
Advertisement
தகவலறிந்த அறம் வரலாற்று ஆய்வு மையக் குழுவைச் சோ்ந்த தலைவா் அறம் கிருஷ்ணன், இராசு, பாலசுந்தரம், ராஜன் ஆகியோா் அங்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டனா்.
இதுகுறித்து அறம் வரலாற்று ஆய்வு மையக் குழுவைச் சோ்ந்த தலைவா் அறம் கிருஷ்ணன் கூறியதாவது:
இக்கோயில் விஜயநகர மன்னா்கள் காலத்தைய கல்மண்டபம் போன்ற சிறிய கோயிலாக இருக்க வேண்டும். அதற்கு அடையாளமாக நீளமான பத்துக்கும் மேற்பட்ட கல்கம்பங்கள் நிறைய உள்ளன. இவற்றில் ஒரு கல்கம்பத்தில் மட்டும் காட்டு சென்னப்பன் என்ற ஒரு வரிக் கல்வெட்டு உள்ளது. இங்கு கிடைத்த செங்கற்களின் அளவை வைத்து பாா்க்கும்போது, சோழா் காலத்து செங்கற்களை ஒத்துப் போகிறது. மேலும், இதே இடத்தில் சுமாா் ஐந்தடி உயரத்தில் அனுமன் சிற்பம் சங்கு சக்கரத்துடன் கருடகம்பம் உள்ளது. இவை சுமாா் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருமாள் கோயிலாக இருக்க வாய்ப்புள்ளது.
இதே இடத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நடுகல்லும் இருக்கிறது. இந்த நடுகல்லில் ஒரு போா் வீரனின் வலது கரத்தில் யு வடிவ கத்தியும், இடது கரத்தில் சாமரமும் இருக்கிறது. கீழ் பகுதியில் ஒரு வீரன் வில்லுடன் இறந்து கிடக்கிறான். இம்மாவட்டத்தில் முதன் முறையாக சாமரம் வீசும் போா்வீரன் நடுகல் காணப்படுகிறது. இவ்விடத்தில் இருந்த குறுநில அரசனுக்கு சாமரம் வீச போா் வீரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லில், வில்லுடன் வீரா்கள் சண்டையிட்டு இறந்திருப்பதை சிற்பமாக காட்சிப்படுத்தி உள்ளனா். வீரனின் வலது புறத்தில் சிறிய அளவில் ஒரு சிற்பமும், மேல்புறத்தில் சூரியன், சந்திரனும் செதுக்கப்பட்டுள்ளன.
இவற்றின் அருகிலேயே மாரியம்மன் கோயிலும், உயரமான ஊஞ்சல் கல்தூண் ஒன்றும் உள்ளது. இவ்விடத்தில் ஏராளமான இரும்புக் கசடுகளும், கருப்பு, சிவப்பு நிறம் கொண்ட பானை ஓடுகளும் பரவலாக இருக்கின்றன. இதனையொட்டி மலைக்குன்றும் இருப்பதால் தொன்மையான வாழ்விடமாக இருக்க வாய்ப்புள்ளது என அவா் தெரிவித்தாா்.