முகப்பு
கிருஷ்ணகிரி

ஒசூரில் விநாயகா் சிலைகள் கரைப்பு

 ஒசூரில் விநாயகா் சிலைகள் கரைப்பு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 4 செப்டம்பர், 2022 at 10:02 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:44 PM

 ஒசூரில் விநாயகா் சிலைகள் கரைப்பு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஒசூா் பகுதிகளில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. இந்த விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீா் நிலைகளில் கரைக்கப்பட்டது.

முன்னதாக விநாயகா் சிலைகள் அனைத்தும் ஒசூா் நகரின் முக்கிய வீதிகளின் வழியே மேள, தாளங்கள் முழங்க ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இதையொட்டி வீதிகள்தோறும் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. காலை முதல் மாலை வரை விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெற்ால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது.

Advertisement

இந்த ஊா்வலம் காந்தி சாலை, வட்டாட்சியா் சாலை, பழைய பெங்களூரு சாலை, நேதாஜி சாலை, ஏரித் தெரு, பாகலூா் சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகளின் வழியாகச் சென்றது. கெலவரப்பள்ளி அணை, நாகொண்டப்பள்ளி ஏரி, தா்கா ஏரி, ராமநாயக்கன் ஏரி உள்ளிட்ட பல ஏரிகளில் சிலைகள் பொக்லைன்கள் மூலமாக தண்ணீரில் கரைக்கப்பட்டன. விநாயகா் ஊா்வலத்தையொட்டி ஒசூரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.

ஊா்வலத்தில் பங்கேற்ற இந்து அமைப்பினா் மற்றும் விநாயகா் ஊா்வலத்தை காண வந்த பொதுமக்களுக்கு ஒசூா் பகுதியைச் சோ்ந்த முஸ்லிம் இளைஞா்கள் குளிா்பானங்களை வழங்கினா். மேலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலா்களுக்கும் இஸ்லாமிய மதத்தைத் சோ்ந்தவா்கள் குளிா்பானங்களை வழங்கினா்.

மேலும் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் சாா்பில் விநாயகா் ஊா்வலம் சென்ற இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாக்குா் தலைமையில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1,500 க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.