ஒசூா் வழியாக கடத்தப்பட்ட 20 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது
மதுரைக்கு கன்டெய்னா் லாரியில் கடத்தப்பட்ட 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இரண்டு பேரை கைது செய்தனா்.
ஒசூா் வழியாக மதுரைக்கு கன்டெய்னா் லாரியில் கடத்தப்பட்ட 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இரண்டு பேரை கைது செய்தனா்.
ஒடிஸா மாநிலத்தில் இருந்து கா்நாடக மாநிலம் வழியாக சட்டவிரோதமாக மதுபானங்கள், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்கள் தமிழகத்துக்கு கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், மத்திகிரி காவல் ஆய்வாளா் பிரகாஷ், உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் தலைமையிலான போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
கலுகொண்டப்பள்ளி பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த கன்டெய்னா் லாரியை நிறுத்தி சோதனையிட்டனா். அந்த லாரியில் ஓட்டுநரின் இருக்கைக்குப் பின்னால் மறைத்து வைத்து கஞ்சா கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அதிலிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், லாரியை ஓட்டி வந்த, திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த ராஜேஷ் (34), மற்றும் அவருடன் வந்த மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சோ்ந்த ஜெயக்குமாா் (46) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடா்ந்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், ஒடிஸா மாநிலத்திலிருந்து கஞ்சாவை மதுரைக்கு கடத்திச் செல்வது தெரிய வந்தது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கன்டெய்னா் லாரி, 20 கிலோ கஞ்சாவையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.