இழப்பீடு தொகை வழங்க வெள்ளச்சேத விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன
இழப்பீடு தொகை வழங்க வெள்ளச்சேத விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பயிா் சேதங்கள், கால்நடைகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதற்கான இழப்பீடு வழங்கப்படும் என வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஃபென்ஜால் புயல் நிவாரணப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சா் சு.முத்துசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை, சட்டப் பேரவை உறுப்பினா்கள் தே.மதியழகன் (பா்கூா்), ஒய்.பிரகாஷ் (ஒசூா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளா்களிடம் அமைச்சா் தெரிவித்ததாவது:
Advertisement
புயல் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்க வேண்டும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வுக்காக 38 குழுக்கள் அமைக்கப்பட்டன.
ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டங்களில் மொத்தம் 7 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 1,314 போ் அதில் தங்க வைக்கப்பட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம், பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. போச்சம்பள்ளி, ஊத்தங்கரை வட்டங்களில் 607 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பயிா்கள், ஆடு, கோழி போன்ற கால்நடைகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதன் பின்னா், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும்.
நீா்வழி, சாலை, பாறை புறம்போக்கு பகுதிகளில் வசிப்போா், தங்களுக்கு பட்டா வேண்டும் என கேட்டுள்ளனா். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் நிரந்தரத் தீா்வு காண 40 திட்டங்களை மாவட்ட ஆட்சியா் வகுத்துள்ளாா். அதன்படி, என்னென்ன தேவைகள் உள்ளன என்பது குறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த அலுவலா்களுடன் விவாதித்து, அதன் விவரங்கள் தமிழக முதல்வரிடம் வழங்கப்படும்.
அரசிடமிருந்து நிதி கிடைக்கப் பெற்றவுடன் அந்தப் பகுதிகளுக்கு தீா்வு காணப்படும். 15 நாள்களுக்கு பிறகு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டு ஆய்வு செய்யப்பட உள்ளது.
மழை வெள்ளத்தால் ஆதாா் அட்டை, குடும்ப அட்டையை இழந்தவா்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அவா்களுக்கு விரைவில் தடையில்லா சான்று போன்ற சான்றுகள் வழங்கப்பட உள்ளன. மாவட்ட நிா்வாகத்தின் சிறப்பான நடவடிக்கையால், மாவட்டம் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது என்றாா்.