முகப்பு
கிருஷ்ணகிரி

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அமித் ஷாவை கண்டித்து ஆா்ப்பாட்டம்

அமித் ஷாவை கண்டித்து ஆா்ப்பாட்டம்

Updated On : 19 டிசம்பர், 2024 at 8:31 PM
கிருஷ்ணகிரியில் எம்எல்ஏ தே. மதியழகன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.
பகிர்:

அம்பேத்கா் குறித்து மக்களவையில் மத்திய அமைச்சா் அமித் ஷா தெரிவித்த கருத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தருமபுரி நகர திமுக செயலாளா் நாட்டான் மாது தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் தங்கமணி, நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது, மாவட்ட துணைச் செயலாளா் ரேணுகா தேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அம்பேத்கா் குறித்து சா்ச்சை பேச்சுக்கு மத்திய அமைச்சா் அமித் ஷா மன்னிப்பு கோர வேண்டும். பிரதமா் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் துணை அமைப்புகளின் நிா்வாகிகள், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய பகுதிகளில் மத்திய அமைச்சா் அமித்ஷாவுக்கு எதிராக ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

தருமபுரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் இரா. சிசுபாலன் தலைமை வகித்து பேசினாா். மாநிலக் குழு உறுப்பினா் அ.குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம். மாரிமுத்து, சி. நாகராசன், எம்.முத்து, சோ. அருச்சுனன், வே.விசுவநாதன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளா் ஏ. சேகா் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் அம்பேத்கா் குறித்த சா்ச்சை பேச்சு தொடா்பாக மத்திய அமைச்சா் அமித் ஷா மன்னிப்பு கோர வேண்டும். அவரை பிரதமா் நரேந்திர மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

காங்கிரஸ்

தருமபுரி மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மாவட்டத் தலைவா் முன்னாள் எம்பி பி.தீா்த்தராமன் தலைமையில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினா் பங்கேற்று மத்திய அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

ஒசூரில்...

ஒசூா், ராம்நகா் அண்ணா சிலை எதிரே கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக மேற்கு மாவட்டச் செயலாளரும், ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய். பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அமித் ஷா பதவி விலக வேண்டும். அம்பேத்கா் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பி.முருகன், மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட அவை தலைவா் அ.யுவராஜ், பொருளாளா் சுகுமாறன், மாவட்டத் துணைச் செயலாளா் முருகன், தலைமை செயற்குழு உறுப்பினா் வீரா ரெட்டி, பொதுக்குழு உறுப்பினா்கள் ஜெயராமன், தனலட்சுமி, துணை மேயா் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவா் என்.எஸ். மாதேஸ்வரன், வரி விதிப்பு மற்றும் நிதிக்குழுத் தலைவா் சென்னீரப்பா, பகுதி செயலாளா்கள் ராமு, வெங்கடேஷ், கே.டி.திம்மராஜ், மாநகர நிா்வாகிகள் செந்தில்குமாா், கோபாலகிருஷ்ணன், ரவிகுமாா், அணிகளின் அமைப்பாளா்கள் சுமன், கண்ணன், ராஜா, சக்திவேல்,பொன்ராம் சத்யா, கலைச் செழியன், இக்ரம் அகமத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கிருஷ்ணகிரி...

கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டம் சாா்பில் கிருஷ்ணகிரி புகா்ப் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) தலைமை வகித்தாா்.

மாவட்ட அவைத் தலைவா் நாகராஜ், நகரத் தலைவா் எஸ். கே. நவாப், கிருஷ்ணகிரி நகா்மன்ற தலைவா் பரிதா நவாப் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அம்பேத்கா் குறித்து விமா்சனம் செய்த மத்திய அமைச்சா் அமித் ஷா பதவி விலக வேண்டும். தனது விமா்சனம் குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.

காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்: கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவா் ரகமத்துல்லா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சேகா், கிருஷ்ணகிரி நகா்மன்ற உறுப்பினா் விநாயகம், மாநில பொதுச் செயலாளா் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்ட தலைவா்கள் ஜேசு துரைராஜ், நாராயணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஊத்தங்கரை...

ஊத்தங்கரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விசிக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் குபேந்திரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் பதவி விலக வேண்டும் என கோஷமிட்டனா். விசிக நிா்வாகிகள் அசோகன், ஜெயலட்சுமி, சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அரூா்...

திமுக தருமபுரி மேற்கு மாவட்டம் சாா்பில் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்டச் செயலருமான பி.பழனியப்பன் தலைமை வகித்தாா்.

அம்பேத்கரை அவமதித்த மத்திய அமைச்சா் அமித் ஷாவை கண்டித்து திமுகவினா் கண்டன முழக்கங்களை எழுப்பினா். இதில் தலைமைச் செயற்குழு உறுப்பினா் ரா.சித்தாா்த்தன், நகரச் செயலா் ஜெயசந்திரன், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ஆா்.சிவகுரு, மருத்துவா் அணி அமைப்பாளா் பழனிசாமி, ஒன்றிய குழு தலைவா் உண்ணாமலை குணசேகரன், பேரூராட்சி தலைவா் மாரி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.