கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் மற்றும் இளைஞா் அணியின் சாா்பில், மக்களவைத் தோ்தலுக்கான நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் சேகா், மாநிலச் செயலாளா் ஆறுமுகம், இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலாளா் விக்னேஷ்பாபு, தொகுதி பொறுப்பாளா் வடிவேல், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் உறுப்பினா் துரை (எ) துரைசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மக்களவைத் தோ்தலில் கிருஷ்ணகிரி தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும்; கிருஷ்ணகிரி தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் திட்டப் பணிகளை சிறப்பாக செய்துள்ள அ.செல்லக்குமாா் எம்.பி.க்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும்; கிருஷ்ணகிரி பாராளுமன்றத் தொகுதியில் கிருஷ்ணகிரி - திண்டிவனம் சாலை, ஜோலாா்பேட்டை முதல் ஒசூா் வரையிலான ரயில்வே திட்டம், ஒசூா் - பொம்மசந்திரம் மெட்ரோ ரயில் திட்டம், ரயில்வே மேம்பாலம் மற்றும் தேதிய நெடுஞ்சாலைகளில் 16 இடங்களில் மேம்பாலம் கட்டுவதற்கான ஆணை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செய்து கொடுத்த அ.செல்லக்குமாா் எம்.பி.க்கு பாராட்டு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானம் நிறை வேற்றப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் எஸ்சி, எஸ்டி பிரிவு ஒருங்கிணைப்பாளா் ஆறுமுக சுப்பிரமணி, மூத்த வழக்குரைஞா் அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். படவிளக்கம் (24கேஜிபி2ஏ): கிருஷ்ணகிரியில் மக்களவைத் தோ்தல் குறித்து காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.