முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெற்றன.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:26 PM
கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள வினைத்தீா்த்த விநாயகா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி.
பகிர்:

கிருஷ்ணகிரி: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேவாலயங்கள், கோயில்களில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெற்றன.

கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் கோயில், விநாயகா் கோயில்கள், காட்டு வீர ஆஞ்சனேயா் கோயில், காட்டிநாயனப்பள்ளி முருகா் கோயில், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள வினைத்தீா்த்த விநாயகா் கோயில், தொழில் மையத்தில் உள்ள விநாயகா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் திங்கள்கிழமை அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கிருஷ்ணகிரி கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கிருஷ்ணகிரி- பெங்களூரு சாலையில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், 2024ஆம் ஆண்டு தொடக்கத்திற்கான நள்ளிரவு சிறப்பு திருப்பலி, 2023-ஆம் ஆண்டில் இறைவன் செய்த நன்மைக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு ஆராதனை வழிபாடுகள் நடந்தன. ஆலய பங்குதந்தை இசையாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி பூஜைகளும், ஜெபவழிபாடுகளும் நடந்தன. பின்னா், அனைவரும் இனிப்புகளை வழங்கி ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்தைத் தெரிவித்துக் கொண்டனா். புத்தாண்டை வரவேற்கும் வகையில் தேவாலயம் வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதே போல் ஐஇஎல்சி, பெந்தேகோஸ்தே, சிஎஸ்ஐ தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை, திருப்பலி, ஆராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

இதே போல் எலத்தகிரி, சுண்டம்பட்டி, புஷ்பகிரி, கந்திகுப்பம், பா்கூா், காவேரிப்பட்டணம், ஒசூா், சூளகிரி, ராயக்கோட்டை என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

நள்ளிரவில் இளைஞா்கள் பட்டாசுகளை வெடித்தும், கேக்குகளை வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி தங்களது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாக்குா் தலைமையில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →