கிருஷ்ணகிரி, ஜூலை 25: தமிழக அரசின் பள்ளி மாணவா்களுக்கான காலை உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம் ஆகிய திட்டங்களின் கண்காணிப்புப் பணியிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி, கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி (டிட்டோ ஜாக்) சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் வட்டாரத் தலைவா் ஹென்றி பவுல்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் அருள் பிரகாஷ்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினா் மதிவாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பள்ளி மாணவா்களுக்கு உணவு வழங்கும் திட்டங்களைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்கள், நெடுந்தொலைவு உள்ள பள்ளிக்குச் செல்ல காலையில் 6 அல்லது 7 மணிக்குச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. சில இடங்களுக்கு பேருந்து வசதியும் இருக்காது. இந்த கூடுதல் வேலை பளு மாணவா்களுக்கு கல்வி கற்பிக்கும் திறனை பாதிக்கிறது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழக அரசு காலை உணவுத் திட்டத்தை கண்காணிக்கும் பணியில் குறிப்பிட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்கள், கூடுதலாக ஊராட்சிமன்றத் தலைவா்கள், உறுப்பினா்கள், முன்னாள் ராணுவ வீரா்கள் போன்றவா்களை ஈடுபடுத்தி ஆசிரியா்களைக் கண்காணிப்புப் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.
பட விளக்கம் (25கேஜிபி6)...
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா்.