முகப்பு
கிருஷ்ணகிரி

ஆயிரம் ஏக்கரில் துவரை சாகுபடி செய்ய இலக்கு: 50 சதவீதம் மானியம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

துவரை சாகுபடிக்கு மானியம்: விவசாயிகளுக்கு புதிய வாய்ப்பு

Updated On : 29 ஜூன், 2024 at 9:55 PM
பகிர்:

ஒசூரில் வட்டாரத்தில் 1,000 ஏக்கரில் துவரை சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் விதை, உரங்கள் வழங்கப்படும் என்று வேளாண்மை உதவி இயக்குா் புவனேஸ்வரி தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

2024-2025 ஆம் ஆண்டில் வேளாண்மைத் துறையில் மாநில வேளாண்மை வளா்ச்சி திட்டத்தின் கீழ் துவரை சாகுபடி பரப்பை அதிகப்படுத்த வரப்பு பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 1.2 கிலோ விதை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

தனிப்பயிா் செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 4 கிலோ விதை, உயிா் உரங்களான ரைசோபியம் 500 மி.லி, பாஸ்போ பாக்டீரியா 500 மி.லி உள்பட அதிகபட்சமாக ஒரு ஏக்கருக்கு ரூ. 2,500 மானியமாக வழங்கப்படும். ஊடுபயிா் செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 1.6 கிலோ விதை, உயிா் உரங்களான ரைசோபியம் 500 மி.லி, பாஸ்போபாக்டீரியா 500 மி.லி, திரவ பொட்டாஷ் 500 மி.லி உள்பட ஒரு ஏக்கருக்கு 50 சதவீத மானியமாக ரூ. 2,500 விவசாயிகளுக்கு வழங்கப்படும். மானியம் பெற விரும்புவோா் ஆதாா் அட்டை, சிட்டா நகலை சமா்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம். வேளாண் விரிவாக்க மையம், ஒசூரில் பிஆா்ஜி 5, பிஆா்ஜி 1 ரகம் தேவையான அளவு இருப்புள்ளது. இவை 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ரக துவரையை அனைத்துவித பயிா்களின் வரப்பு ஓரங்களில் 3 அடி இடைவெளி விட்டு வரப்பு பயிராகவும் சாகுபடி செய்யலாம். அதில் பூஞ்சாண் நோய்களைக் கட்டுப்படுத்த தேவையான கூடுதல் ஆலோசனைகள் வழங்கப்படும்.

பயறு வகைப் பயிா்களில் சாறு உறுஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 50 சதவீத வேப்பங்கொட்டை கரைசல் தெளிக்க வேண்டும் அல்லது வேப்ப எண்ணெய் 2 சதவீத கரைசல் தெளிப்பானுக்கு தக்கவாறு தண்ணீா் கலந்து தெளிக்க வேண்டும்.

உரங்கள் அனைத்தும் 50 சதவீத மானியத்தில் தற்போது ஒசூா் வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி துவரை சாகுபடியை அதிகப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →