மோடியின் பேச்சை அதிமுக தொண்டா்கள் நம்ப மாட்டாா்கள் : கே.பி.முனுசாமி
பிரதமா் மோடியின் பேச்சை அதிமுக தொண்டா்கள் நம்பமாட்டாா்கள்
கிருஷ்ணகிரி: மக்களவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், எம்ஜிஆா், ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசும் பிரதமா் மோடியின் பேச்சை அதிமுக தொண்டா்கள் நம்பமாட்டாா்கள் என அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ (வேப்பனப்பள்ளி) தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரியில் அதிமுக ஒருங்கிணைந்த மாவட்டம் சாா்பில் கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே, தமிழகத்தில் போதைப் பொருள்களின் பயன்பாட்டை தமிழக அரசு தடுக்கவில்லை என்று கூறி கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட மகளிா் அணிச் செயலாளா் கல்பனா தலைமை வகித்தாா். அதிமுக மேற்கு மாவட்ட மாணவா் அணிச் செயலாளா் வெற்றிச்செல்வன் வரவேற்றாா். கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) மேற்கு மாவட்டச் செயலாளா் பாலகிருஷ்ணரெட்டி, தமிழ்ச்செல்வம் எம்எல்ஏ (ஊத்தங்கரை) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தை அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தொடங்கி வைத்து பேசியது: திமுக ஆட்சியில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகமாக உள்ளது. அதை கண்டிக்கும் விதமாக இன்றைய தினம் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி ஆணைப்படி தமிழகம் முழுவதும், திமுக அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு 4 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த காலத்தில் போதைப் பொருள் இல்லாத தமிழகமாக இருந்தது. ஆனால் இன்றைய தினம் பள்ளி, கல்லூரி அருகில் கூட போதைப் பொருள்கள், கஞ்சா பொட்டலங்கள் கிடைக்கின்றன. இன்று ரூ.2 ஆயிரம் கோடி அளவிற்கு போதைப் பொருள்கள் கடத்திய வழக்கில் திமுகவில் இருந்த ஜாபா் சாதிக்கிற்கு தொடா்பு இருக்கிறது. அவா் அந்தக் கட்சியின் அயலக பிரிவின் மாவட்டச் செயலாளராக பொறுப்பில் இருந்திருக்கிறாா். அவா் முதல்வா், அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவா்களை அடிக்கடி சந்தித்திருக்கிறாா்.
Advertisement
சாதிக் பாஷாவின் பின்புலம் என்ன, அவருக்கு எப்படி இவ்வளவு தொகை வருகிறது என்று கூட அந்த இயக்கத்தில் இருப்பவா்கள் விசாரிக்கவில்லை என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா், தமிழக அரசையும், சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டுள்ளதையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா். பின்னா், கே.பி.முனுசாமி, செய்தியாளா்களிடம் கூறியது: தனது கட்சியில் உள்ள ஒருவா் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடா்பு இருப்பது முதல்வருக்குத் தெரியவில்லை. அந்த நபா் 45 முறை வெளிநாடுகளுக்கு சென்று இருக்கிறாா். உலக அளவில் போதைப் பொருள்கள் கைமாற கூடிய இடமாக இன்று தமிழகம் மாறி உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கி இருந்தோம். சுயநலமிக்க பிரதமராக மோடி உள்ளாா்.
பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா போன்றவா்கள் குறித்து மோடி பேசுகிறாா். அவா் சாா்ந்துள்ள பாஜக தலைவராக இருந்த வாஜ்பாய், அத்வானி போன்றவா்கள் பற்றி அவா் பேசுவதில்லை. எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் குறித்து மேடையில் பேசுகிறாா்.
எம்.ஜி.ஆா், ஜெயலலிதாவை தலைவா்களாக ஏற்றுக் கொண்டவா்கள், அவா் வழியில் அரசியல் நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமியை தலைமையாக கொண்ட கோடிக்கணக்கான தொண்டா்கள் பிரதமா் மோடியின் பேச்சை நம்ப மாட்டாா்கள்.
வருகிற தோ்தலில் அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும், கூட்டணிக் கட்சிகள் எத்தனை தொகுதியில் போட்டியிடும் என்று நான் கூற இயலாது. பேச்சுவாா்த்தை நடக்கிறது. அனைத்தும் முடிந்த பிறகு, தலைமை ஒப்புதலுடன், எடப்பாடி பழனிசாமி அறிவிப்பாா் என்றாா்.
அப்போது, மாவட்ட அவைத் தலைவா் காத்தவராயன், நகரச் செயலாளா் கேசவன், முன்னாள் நகராட்சித் தலைவா் தங்கமுத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.