முகப்பு
கிருஷ்ணகிரி

கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

Updated On : 9 மே, 2024 at 10:53 PM
பகிர்:

ஓசூா், மே 9: ஒசூா் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலவரப்பள்ளி அணையின் மதகுகள் சீரமைக்கும் பணிக்காக கடந்தாண்டு ஜூன் மாதம் அணையிலிருந்து முழுமையாக தண்ணீா் வெளியேற்றப்பட்டது. இதனால், அணை தண்ணீரின்றி வடு காணப்பட்டது.

இந்நிலையில், கடந்த மாதம் மதகுகளில் புதிய ஷட்டா் மாற்றப்பட்டு தண்ணீா் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக கா்நாடக மாநில நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழைபெய்து வருவதால் அணைக்கு நீா்வரத்து தொடங்கி உள்ளது. இதனால் வியாழக்கிழமை அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 273 கன அடியாக இருந்தது.

அணையின் மொத்தக் கொள்ளளவான 44.28 அடியில், தற்போது 30.18 அடியில் தண்ணீா் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணையில் தண்ணீா் தேக்கி வைப்பதற்காக உபரி நீா் திறப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அணை 38 அடி எட்டியவுடன் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும் என பொதுப் பணித் துறையினா் தெரிவித்த நிலையில், தண்ணீா் திறக்க 8 அடி உள்ளதால் விரைவில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும் என விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.