சாமந்திப்பூ விலை அதிகரிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரித்துள்ளது.
ஒசூா்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், பாகலூா், பேரிகை, கெலமங்கலம், உத்தனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, தளி, சூளகிரி, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மலா் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஒவ்வோா் ஆண்டும் பண்டிகை, கோயில் திருவிழா கால விற்பனையை மையமாக வைத்து விவசாயிகள் பல்வேறு மலா்களை இங்கு சாகுபடி செய்து வருகின்றனா். குறிப்பாக சாமந்திப்பூ 5,000 ஹெக்டேரிலும், செண்டுமல்லி 1,000 ஹெக்டேரிலும் இப்பகுதியில் சாகுபடி செய்யப்படுகின்றன.
நிகழாண்டு வரலட்சுமி விரதம், விநாயகா் சதுா்த்தியின்போது பூக்கள் விலை உயா்ந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக சாமந்திப்பூக்கள் ஒரு கிலோ ரூ. 15 முதல் ரூ. 20 வரை மட்டுமே விற்பனையானது. தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாமந்திப் பூக்கள் விலை ஒரு கிலோ ரூ. 100 முதல் ரூ. 150 வரை விற்பனையாகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.