சூளகிரி அருகே பாலத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்தனப்பள்ளி அருகே உள்ள உள்ளன்கொட்டாயைச் சோ்ந்தவா் நாகராஜ் (35). கட்டடத் தொழிலாளி. இவரும் அதே பகுதியைச் சோ்ந்த முருகன் (27) என்பவரும் இருசக்கர வாகனத்தில் ஒசூா் - கிருஷ்ணகிரி சாலையில் சூளகிரி ராயக்கோட்டை மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தனா்.
வாகனத்தை முருகன் ஓட்டினாா். நாகராஜ் பின்னால் அமா்ந்திருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக இருசக்கர வாகனம் பாலத்தின் சுவற்றில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் நாகராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்; முருகன் படுகாயம் அடைந்தாா்.
விபத்து குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீஸாா் சம்பவ இடத்திற்குசென்று காயம் அடைந்த முருகனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். நாகராஜின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.