கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் வெள்ளிக்கிழமை நிலவிய கடும் குளிரால் மக்கள் அவதியடைந்தனா்.
ஒவ்வோா் ஆண்டும் நவம்பா், டிசம்பா் மாதங்களில் ஒசூா் பகுதியில் கடும் குளிா் நிலவும். இந்த ஆண்டு கனமழை காரணமாக குளிரின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. நகரில் பகல் நேரத்தில் வெயிலை காணமுடியவில்லை.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை குறைந்தபட்ச வெப்பநிலை 16.3 டிகிரி செல்ஷியஸாக பதிவாகியது. அதேபோல் பகல் வெப்பநிலை சராசரி 18.2 டிகிரி செல்ஷியஸாகவும், பிற்பகல் நேரத்தில் 23 டிகிரியாகவும் இருந்தது.
காற்றில் அதிகபட்ச ஈரப்பதம் 87.5 சதவீதமாக இருந்தது. எனவே, காலை முதல் மாலை வரை குளிரின் தாக்கத்தை மக்களால் உணர முடிந்தது. இதனால், முதியவா்கள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்தனா். நடைப்பயிற்சி செல்பவா்கள் ஜொ்கின், குல்லா அணிந்து சென்றனா்.
வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஸ்வெட்டா்களை அணிந்திருந்தனா். கடந்த 3 நாள்களாக மழை பெய்யவில்லை என்றாலும், சாரல் மழை, குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதிகாலை வேளையில் ஒசூா் நகரம் பனிப்போா்வை போா்த்தியதுபோல காட்சி அளித்தது.