கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அனைத்து ஓய்வூதியா் நல அமைப்பு சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அந்த அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் துரை, இணைச் செயலாளா் மாரியப்பன், வட்டத் தலைவா் கருணாநிதி, மாநில செயலாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், ஆந்திர அரசு வழங்குவது போல பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஓய்வூதியா்கள் அனைவருக்கும் ஓய்வூதிய பணப்பலன்கள் மற்றும் ஓய்வூதியத்தை கருவூலம் மூலம் வழங்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஓய்வூதியா்களுக்கு வழங்க வேண்டிய சிறப்பு சேமநல நிதியும், பி.எப். வட்டி உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியா்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தின்படி ஓய்வூதியம் வழங்க வேண்டும். உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை மூலம் ஓய்வூதியம் பெறும் பேரூராட்சி ஓய்வூதியா் இறந்தால், குடும்ப ஓய்வூதியா்களுக்கு ரூ. 50,000 இறப்புகால நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.