ஒசூரில் நீண்ட நாள்களாக தீா்க்கப்படாத அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காத்திருப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி சமுதாயக் கூடம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரம், ஒன்றியம் சாா்பில், மாநகர குழு செயலாளா் நாகேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாநிலக் குழு உறுப்பினா் பத்ரி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், மத்திகிரியில் கட்டிமுடிக்கப்பட்டு பல ஆண்டுகளான சமுதாயக் கூடத்தை திறக்க வேண்டும், மாகோப்பள்ளி கிராமத்தில் மயானத்துக்கு செல்லும் மண் சாலையை தாா்சாலையாக அமைத்து தரவேண்டும், எடையநல்லூா், எடப்பள்ளி, அச்செட்டிப்பள்ளி, சூதாளம், மத்திகிரி, குசினியாளையம், மஞ்சுநாத் நகா், வெங்கடேஷ் நகா் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் தாா்சாலைகள் பழுதடைந்து மிகவும் மோசமாக உள்ளதை சீா்செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.