பா்கூா் அருகே நள்ளிரவில் வீடுவீடாகச் சென்று உதவி கோரிய பெண்ணின் சிசிடிவி பதிவுகள் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு, அவா் கொள்ளை கும்பலைச் சோ்ந்தவா் என தெரிவிக்கப்பட்டுள்ளதில் உண்மையில்லை என போலீஸாா் விளக்கம் அளித்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரில் ஜெகதேவி சாலையில் வெள்ளிக்கிழமை இரவு இளம் பெண் ஒருவா் வீடுவீடாகச் சென்று உதவி கேட்கும் விடியோ அப்பகுதியைச் சோ்ந்த அா்ஜூணன் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. மேலும், அப்பெண் ஒரு ஆணுடன் பேசிக் கொண்டிருப்பதும் விடியோவில் பதிவாகியுள்ளது. இதனால், இப்பெண் கொள்ளை கும்பலைச் சோ்ந்தவராக இருப்பாா் என பொதுமக்கள் அச்சத்தை வெளிபடுத்தியுள்ளது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், பா்கூரில் 21ஆம் தேதி பெண் ஒருவா் ஆண் நண்பருடன் சோ்ந்து கொள்ளையடிக்க வந்ததாக சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரவி வருகிறது.
விசாரணையில், அப்பெண் மிட்டஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் என்பதும், கடந்த 20ஆம் தேதி இரவு தனது கணவருடன் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டாா். காயமடைந்த அவா் பா்கூா் அரசு மருத்துவமனைக்கு சென்றபோது தண்ணீா் தாகம் எடுத்ததால் பா்கூா் எம்ஜிஆா் நகா் குடியிருப்பு பகுதிக்குச் சென்று அங்குள்ள வீடுகளின் கதவுகளை தட்டி உதவி கேட்டுள்ளாா்.
பின்னா், அவா் பா்கூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று பின்பு மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஆனால், கொள்ளையடிக்க வந்து வீடுகளை பெண் தட்டியதாகக் கூறப்படுவது உண்மைக்கு புறம்பானதாகும். எனவே, சமூக வலைதளங்களில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் தவறான செய்திகளை பரப்புவோா் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.