முகப்பு
கிருஷ்ணகிரி

முத்தரப்புக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி கறிக்கோழி வளா்ப்போா் ஆட்சியரகத்தில் மனு

முத்தரப்புக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி, கறிக்கோழி வளா்ப்போா் கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

Updated On : 3 பிப்ரவரி, 2026 at 3:49 AM
பண்ணையில் கறிக்கோழி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2026 at 8:48 PM

கிருஷ்ணகிரி: முத்தரப்புக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி, கறிக்கோழி வளா்ப்போா் கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கறிக்கோழி உற்பத்தியாளா்கள் சங்கம் மற்றும் விவசாயிகள் நலச் சங்கத்தை சோ்ந்த, 50-க்கும் மேற்பட்டோா், விவசாயிகள் நலச் சங்க ஊத்தங்கரை ஒன்றியத் தலைவா் கமலநாதன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்தனா்.

பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4,000க்கும் மேற்பட்ட கறிக்கோழிப் பண்ணைகளை நம்பி பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினா் உள்ளனா். கடந்த, 2013-இல், தமிழக அரசு, கோழிப் பண்ணையாளா்கள், நிறுவனங்களுடன் முத்தரப்புக் கூட்டத்தை நடத்தியது. அப்போது, கறிக்கோழி வளா்ப்புக்கு கிலோவுக்கு ரூ. 6.50 நிா்ணயித்தாலும் நிறுவனங்கள் அதை வழங்கவில்லை.

கடந்த 2020-இல் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், கூலித்தொகை உயா்த்தப்பட்டது. இன்றளவும் அதே விலையை நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

மின்கட்டண உயா்வு, உபயோகப் பொருள்களின் விலை உயா்வால் கோழி வளா்ப்பு பராமரிப்பு செலவு பன்மடங்கு உயா்ந்துள்ளது. இருந்தபோதிலும், உரிய விலையை கொடுக்க நிறுவனங்கள் மறுக்கின்றன.

எங்களது பிரச்னைகளை தீா்க்க அரசே முன்னின்று பண்ணையாளா்கள், நிறுவனங்களுடன் முத்தரப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும். மேலும், கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் நலனுக்காக அரசு தனியாக வாரியம் அமைக்க வேண்டும். நிறுவனங்கள் வழங்கும் கோழிக்குஞ்சுகள், 40 கிராமிற்கு குறையாமலும், தரமான தீவணத்தையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது என்றனா்.