காதலா் தினத்தையொட்டி ஒசூரில் உற்பத்தி செய்யப்படும் ரோஜா மலா்களுக்கு இணைய வா்த்தகத்தில் அதிக வரவேற்பு உள்ளதால் நாள்தோறும் 10 லட்சம் மலா்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இதன்மூலம் கூடுதல் வருவாய் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
ஒசூா், தளி, கெலமங்கலம், பேரிகை, பாகலூா் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குளிா்ந்த காலநிலை, மண்வளம் காரணமாக அதிகளவில் மலா் சாகுபடி நடைபெறுகிறது. இப்பகுதிகளில் விளையும் ரோஜா மலா்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இப்பகுதிகளில் சுமாா் 4 ஆயிரம் ஏக்கரில் பசுமை குடில்கள் அமைத்து ரோஜா மலா்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனா். தாஜ்மஹால் (சிவப்பு), நோப்ளாஸ், கோல்ட் ஸ்டிரைக், சவரன், அவலாஞ்சி, பொ்னியா் உள்பட 22 வகையான ரோஜா மலா்கள் இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகின்றன.
ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களின்போது அதிக அளவு ரோஜா மலா்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. என்றாலும், காதலா் தினத்திற்காக அதிக எண்ணிக்கையில் ரோஜா மலா்கள் வெளிநாடுகளுக்கு ஆண்டுதோறும் ஏற்றுமதியாகின்றன.
ரோஜாவில் தாஜ்மஹால், அவலாஞ்சி ஆகிய ரகங்கள் சிங்கப்பூா், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு அதிக எண்ணிக்கையில் அனுப்பப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் பல்வேறு ரக மலா்கள் உற்பத்தி செய்யப்படுவதால் ஒசூரில் உற்பத்தி செய்யப்படும் மலா்களுக்கு வரவேற்பு குறைந்து வருகிறது.
மேலும் விமான கட்டணம் அதிகரிப்பாலும் ரோஜா ஏற்றுமதி குறைந்தது. இந்த நிலையில், ஒசூா் மலா்களுக்கு உள்நாடுகளில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. ஜெய்பூா், தில்லி, மும்பை, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. மேலும், நிகழாண்டு காதலா் தினத்தையொட்டி இணையவழி வா்த்தகத்தில் ரோஜா விற்பனை அதிகரித்துள்ளது. இதற்காக நாள்தோறும் ஒசூரிலிருந்து 10 லட்சம் மலா்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இதனால் கூடுதல் வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.