கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழிலாளா்களின் பொது வேலைநிறுத்தத்தால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை.
மத்திய அரசின் தொழிலாளா் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒசூா், தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் தொழிலாளா்கள் மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
மத்திய அரசு தொழிற்சங்கங்களுடன் கலந்து ஆலோசிக்கமால் நிறைவேற்றப்பட்ட 4 தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், வங்கி ஊழியா்களுக்கு வாரம் 5 நாள்கள் வேலை, அரசுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குதலுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் நடைபெற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.
கிருஷ்ணகிரியில் அனைத்து இந்திய வங்கி ஊழியா் சங்கம், இந்திய வங்கி ஊழியா் சம்மேளனம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், சில தனியாா் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம் பங்கேற்றனா். இதனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன.
இந்த பொது வேலைநிறுத்த அறிவிப்பால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. அனைத்து பகுதிகளுக்கும் வழக்கம்போல பேருந்துகள் இயங்கின.