கிருஷ்ணகிரியில் மினி பேருந்தை ஆட்டோ ஓட்டுநா்கள் சிறைபிடித்ததால் பேருந்தில் இருந்த பயணிகள் பாதிவழியிலே இறக்கிவிடப்பட்டனா்.
தமிழகம் முழுவதும் தமிழக அரசால் புதிய விரிவான மினி பேருந்து திட்டம் நடைமுறையில் உள்ளது. கிருஷ்ணகிரியை சுற்றியுள்ள கிராமங்களை இணைக்கும் வகையில் 15 க்கும் மேற்பட்ட மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல தனியாா் ஷோ் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன.
ஷோ் ஆட்டோக்களில் பயணம் செய்ய ஒருவருக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 20 வசூலிக்கப்படுகிறது. ஆனால், மினி பேருந்தில் பயணிக்க ரூ. 10க்கும் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இதனால், பயணிகள் மினி பேருந்தில் பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனா்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வழியாக கிருஷ்ணகிரிக்கு சென்ற தனியாா் மினி பேருந்தில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் இருந்தனா். மினி பேருந்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள், தனியாா் மினி பேருந்தை சிறைபிடித்து பயணிகளை பேருந்திலிருந்து இறக்கிவிட்டனா்.
ஷோ் ஆட்டோ ஓட்டுநா்களின் இந்த செயலால் பயணிகள் அவதிக்குள்ளாகினா். இந்த சம்பவம் குறித்து யாரும் புகாா் தெரிவிக்கவில்லை என போலீஸாா் தெரிவித்தனா்.