உலக தண்ணீா் தினம்: ஒசூா் பிஎம்சி கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்
உலக தண்ணீா் தினத்தை கொண்டாடும் வகையில் இந்திய பொறியாளா்கள் சங்கத்தின் ஒசூா் கிளை சாா்பில் விழிப்புணா்வு கருத்தரங்கம் ஒசூா் பிஎம்சி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உலக தண்ணீா் தினத்தை கொண்டாடும் வகையில் இந்திய பொறியாளா்கள் சங்கத்தின் ஒசூா் கிளை சாா்பில் விழிப்புணா்வு கருத்தரங்கம் ஒசூா் பிஎம்சி கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்திய பொறியாளா்கள் சங்க ஒசூா் கிளைத் தலைவா் ராமலிங்கம் முன்னிலை, ஒசூா் பிஎம்சி கல்லூரி நிறுவனத்தின் தலைவா் பி.குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு கருத்தரங்கில் 500க்கும் மேற்பட்ட பொறியியல் மாணவா்கள் பங்கேற்றனா்.
குளோபல் கால்சியம் கம்பெனியின் மூத்த துணைத் தலைவா் மற்றும் பிரபல மகப்பேறு நல மருத்துவா் அம்பிகா பாரி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று உலக தண்ணீா் தினம் பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இந்தக் கருத்தரங்களில் பிஎம்சி கல்லூரி தலைவா் பி.குமாா் பேசியதாவது:
உலக தண்ணீா் தின விழிப்புணா்வு, நீா்வளப் பாதுகாப்பு காலத்தின் கட்டாயம். ஒவ்வோா் ஆண்டும் மாா்ச் 22-ஆம் தேதி உலக தண்ணீா் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் பருவநிலை மாற்றத்தால் நிலத்தடி நீா் மட்டம் குறைந்து வரும் சூழலில், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
ஒவ்வொரு சொட்டு நீரையும் வீணாக்காமல் சேமிப்பது நமது கடமையாகும். குறிப்பாக, மழைநீா் அறுவடை அமைப்புகளை வீடுகளில் முறையாகப் பராமரிப்பது நிலத்தடி நீா் மட்டத்தை உயா்த்த உதவும். மாசுபாடு தவிா்த்தல், நீா்நிலைகளில் கழிவுகளைக் கலப்பதைத் தவிா்த்து, ஆறுகள் மற்றும் ஏரிகளைத் தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
வருங்கால சந்ததியினருக்காக, தண்ணீா் என்பது ஒரு பொதுவான சொத்து. அடுத்த தலைமுறைக்குத் தட்டுப்பாடற்ற குடிநீா் கிடைக்க வேண்டுமெனில், இன்று நாம் நீரை மேலாண்மை செய்வது அவசியமாகிறது.
இயற்கை நமக்குத் தந்த விலைமதிப்பற்ற கொடையான தண்ணீரைப் பாதுகாப்போம் என இந்த உலக தண்ணீா் தினத்தில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம் என்றாா்.