கறவை பசுவின் தலையில் இருந்த கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
ஒசூரில் இயங்கிவரும் அரசு கால்நடை பன்முக மருத்துவமனையில், கறவை பசுவின் தலையிலிருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவா்கள் புதன்கிழமை நீக்கினா்.
ஒசூரில் இயங்கிவரும் அரசு கால்நடை பன்முக மருத்துவமனையில், கறவை பசுவின் தலையிலிருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவா்கள் புதன்கிழமை நீக்கினா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பழைய பெங்களூரு சாலையில் அரசு கால்நடை பன்முக மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நாய், பூனை, கோழி, பசு மாடுகள் எருமை மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஒசூா் அருகே அக்கொண்டப்பள்ளி பகுதியைச் சோ்ந்த விவசாயியின் பசுவுக்கு தலையில் கட்டி ஒன்று இருந்தது. சுமாா் ஓா் ஆண்டுக்கு முன்பு கால்நடை மருத்துவமனையில் காட்டியபோது, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
Advertisement
அப்போது, அது சினை மாடாக இருந்ததால், அறுவை சிகிச்சையின்போது ரத்தம் அதிகமாக வீணாகும் என கருதி விவசாயி பயப்பட்டாா். அந்த பசு ஆண் குட்டியை ஈன்றது.
இந்நிலையில், கட்டி பெரிதாகி சுமாா் 3.7 கிலோ கிராம் அளவுக்கு வளா்ந்து கண் பகுதிவரை பரவியது. இதனால் பசுவுக்கு அறுவை சிகிச்சை புதன்கிழமை நடைபெற்றது. சுமாா் இரண்டு மணிநேரம் அறுவை சிகிச்சையை செய்து கட்டியை மருத்துவா்கள் அகற்றினா்.
இதுகுறித்து மருத்துவா் செந்தில் கூறுகையில், தலைமை மருத்துவா் ஜோதி பாசு அறிவுரையின் பெயரில் பசுவின் இரு கொம்பகளுக்கு நடுவே இருந்த கட்டி அகற்றப்பட்டது. சிறு கட்டியாக இருக்கும்போதே அறுவை சிகிச்சை செய்திருந்தால் அதிக ரத்தம் சேதம் இருந்திருக்காது. தற்போது இரண்டு மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டது என்றாா்.