நாமக்கல்

அபூர்வ மூலிகைகள் நிறைந்த கொல்லிமலை வனம்

கொல்லிமலையில் பல ஆயிரம் ஏக்கரில் அபூர்வ வகை மூலிகைகள் இருந்தும் அவற்றைப் பயன்படுத்தவும், பாதுகாக்கவும் வாய்ப்பு இல்லாத அவல நிலை உள்ளது.

கே.விஜயபாஸ்கா்

கொல்லிமலையில் பல ஆயிரம் ஏக்கரில் அபூர்வ வகை மூலிகைகள் இருந்தும் அவற்றைப் பயன்படுத்தவும், பாதுகாக்கவும் வாய்ப்பு இல்லாத அவல நிலை உள்ளது.
 கூடுவிட்டுக் கூடு பாயும் அதிசய சித்தர்கள் பலர் இன்னும் வாழ்வதாக மக்கள் நம்பிக்கை கொண்டுள்ள இடம்தான் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை. கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில்ஓரி ஆட்சி செய்த வளமான மலை நாடு. கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீட்டர் உயரத்தில், 250 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட மூலிகை வனம். இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.
 14 வருவாய்க் கிராமங்களை (மலை நாடு) உள்ளடக்கிய 250-க்கும் மேற்பட்ட கிராமங்களைக் கொண்டதுமான இந்த மலை நாட்டுக்கு, நவநாகரிக புதிய கலாசாரங்கள் வந்துவிட்டாலும், இங்குள்ள மூலிகைகளும், சிறு தானியங்களும் கொல்லிமலையின் பழைமையைப் பாதுகாத்து வருகின்றன.
 இங்குள்ள மக்கள் ஆயிரக்கணக்கில் உள்ள ஆபூர்வ வகை மூலிகைகளைக் காப்பாற்றி, அழியாது பாதுகாத்து வருகின்றனர். தினை, கேழ்வரகு, சாமை ஆகிய பாரம்பரிய சிறு தானியங்களைப் பல நூறு ஏக்கர்களில் பழைய விவசாய முறைகளை மேற்கொண்டு சாகுபடி செய்து வருகின்றனர்.
 14 மலை நாடுகளில் பரவிக் கிடக்கும் மூலிகைகள்: வாழவந்தி நாடு, வளப்பூர் நாடு, அரியூர் நாடு, தின்னனூர் நாடு, குண்டூர் நாடு, சேளூர் நாடு, தேவனூர் நாடு, ஆலந்தூர் நாடு, குண்டனி நாடு, திருப்புலி நாடு, எடப்புலி நாடு, சித்தூர் நாடு, பெரக்கரை நாடு, பெயில் நாடு என 14 வருவாய்க் கிராமங்களில் லட்சக்கணக்கில் மூலிகைகளும், ஆதி காலத்து சிறு தானியங்களும் பரவிக் கிடக்கின்றன.
 மூலிகைகளில் ஜோதிப் புல், சாய்ந்தாடும் பாவை, கருநெல்லி, சிவப்புக் கற்றாழை, கருவாழை, சிவப்புக் கடுக்காய், ரோமவிருட்சம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
 ஜோதிப் புல் ஒன்றைப் பிடுங்கி தீயில் பற்றவைக்க மெழுகுவர்த்தி போல விடியவிடிய சுடர்விட்டு வெளிச்சம் தருமாம். இன்றும் இந்த மலையில் உள்ள குகைகளில் தங்கியிருக்கும் சித்தர்கள் பலருக்கு இரவு நேர வெளிச்சம் கொடுப்பது இந்த ஜோதிப்புல்தானாம்.
 இதேபோல, ரோம விருட்சம் என்ற மரத்தின் இலைகளை அரைத்து 45 நாள்கள் தலையில் தேய்த்து, கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை அருவியில் குளித்துவர தலை முடி உதிர்வது உடனே நின்று, கருகரு முடியைப் பெறலாம் எனக் கூறப்படுகிறது.
 கொல்லிமலையில் உள்ள அடர் வனங்களில் இயற்கையில் விளையும் ஒரு வாழைதான் கல் வாழை, இந்தப் பழத்தை இரண்டு மண்டலம் (90 நாள்கள்) சாப்பிட்டு வர, பெருத்த தேகம் கொண்டோர் இளைத்து சராசரியான தேகத்தைப் பெறுவார்களாம்.
 ஆதள மூலிகைச் செடியின் இலையைக் கிள்ளினால் அதில் ஒருவித பால் கசியுமாம். அந்தப் பாலுடன் கரும் பூனையின் முடியைக் கலந்து செம்பு பாத்திரத்தில் ஊற்றி, சூடு செய்து சுண்டவைத்து, அதை மலைத் தேன் கொண்டு பிசைந்து, சிறு உருண்டையாக்கி, அதை செப்புத் தகடு எந்திரத்தினுள் இட்டு 6 மாதங்களுக்கு மூடி வைக்க வேண்டுமாம். 6 மாதங்கள் கழித்து செப்புத் தகட்டை நீக்கிவிட்டு சிறு உருண்டைகளை வாயில் போட்டு அதக்கிக் கொண்டால் யார் கண்ணுக்கும் தெரியாமல் மனிதர்கள் மாயமாக மறைந்து விடுவார்களாம். அத்தகைய ஆற்றல் கொண்ட அபூர்வ மூலிகைதான் ஆதளம். இந்த அபூர்வ மூலிகையின் சக்தியால்தான் இன்றளவும் பல சித்தர்கள் யார் கண்ணுக்கும் புலப்படாமல் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.
 இதுபோன்று இந்தப் பகுதியில் பல ஆயிரம் மூலிகைகள் இங்கு பயன் தெரியாமல், பாதுகாப்பும் இல்லாமல் மறைந்து கிடக்கின்றன.
 மாறாத சிறுதானியங்கள் சாகுபடி: கொல்லிமலை 14 மலை நாடுகளில் உள்ள மலைவாழ் மக்களின் முக்கியத் தொழில் விவசாயம்தான். வீரிய ஒட்டு ரகங்கள், மரபணு மாற்று விதைகள் என்று நவீன விவசாயம் இங்கும் வந்துவிட்டாலும், இங்குள்ள மக்கள் பலரும் கேழ்வரகு, தினை, சாமை ஆகிய மூன்று சிறு தானியங்களைப் பல நூறு ஆண்டுகளாக, பல ஆயிரம் ஏக்கர்களில் பயிரிட்டு வருகின்றனர்.
 டிராக்டர், ரசாயன உரம், பூச்சி மருந்து என்று பசுமைப் புரட்சி சில ஆண்டுகளுக்கு முன்னர் மலை மீது ஏறிவிட்டபோதிலும், பாரம்பரிய விவசாயத்தைக் கைவிடாமல் பழைமைப் புரட்சி செய்து வருகின்றனர் இந்த மக்கள்.
 பழைமைக்கும், பாரம்பரியத்துக்கும் பாதுகாப்பு தேவை: இதுகுறித்து தமிழ்நாடு பழங்குடியினர் மலையாளி நலச் சங்க மாநிலத் தலைவர் கே. குப்புசாமி கூறியதாவது:
 கொல்லிமலையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மூலிகை வகைகள், உடல் நலன் காக்கும் பழ வகைகள், சிறு தானியங்கள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்த பல கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், இவற்றைப் பாதுகாக்க எந்த ஏற்பாடும் இல்லை.
 மூலிகை ஆராய்ச்சி மையம், வேளாண் வணிகத் துறை மூலம் சிறு தானியச் சந்தை, பழச் சந்தை ஆகியவற்றை கொல்லிமலையின் அமைப்பதன் மூலம், இந்தப் பொக்கிஷங்களைப் பாதுகாக்கவும், மக்களின் நலன் காக்கும் வகையில் பயன்படுத்தவும் முடியும் என்றார் அவர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீயணைப்பு பணியின் போது சிலிண்டா் வெடித்து விபத்து: 13 போ் காயம்

வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!

மகளிருக்கு ரூ.5,000 வழங்க அதிமுகவின் அழுத்தமே காரணம்: எடப்பாடி கே.பழனிசாமி

23.2.1976: இருஅடுக்கு ரயில் பெட்டி மேற்கூடு - பெரம்பூர் தொழிற்சாலை தயாரிக்கிறது

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

SCROLL FOR NEXT