முகப்பு
நாமக்கல்

விபத்தில் சிக்கியவர்களை மீட்ட அமைச்சர் பி.தங்கமணி: பொதுமக்கள் பாராட்டு

வையப்பமலை அருகே காரில் சென்றபோது விபத்தில் சிக்கிய 3 பேரை மீட்டு,  உடனடியாக சிகிச்சைக்கு அனுப்ப ஏற்பாடு செய்த அமைச்சர் பி.தங்கமணியை அப் பகுதி மக்கள் பாராட்டினர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

வையப்பமலை அருகே காரில் சென்றபோது விபத்தில் சிக்கிய 3 பேரை மீட்டு,  உடனடியாக சிகிச்சைக்கு அனுப்ப ஏற்பாடு செய்த அமைச்சர் பி.தங்கமணியை அப் பகுதி மக்கள் பாராட்டினர்.
நாமக்கல் மாவட்டம்,  வெண்ணந்தூரில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற தனியார் விழாவில் பங்கேற்க வந்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை வரவேற்பதற்காக தமிழக மின்சாரம்,  மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி பள்ளிபாளையத்திலிருந்து திருச்செங்கோடு வழியாக ராசிபுரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருச்செங்கோடு-ராசிபுரம் சாலையில் வையப்பமலை அருகே தென்னம்பாளையம் என்ற இடத்தில் கார் ஒன்று சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால் கால்வாயில் கவிழ்ந்து கிடந்தது.
இதைப் பார்த்த அமைச்சர்,  உடனடியாக காரை நிறுத்தி,  அதிலிருந்து இறங்கினார்.   கார் அருகே சென்று பார்த்தபோது,  காருக்குள் 3 பேர் சிக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து,  அமைச்சருடன்  பாதுகாப்புக்குச் சென்ற போலீஸார் மற்றும் அப் பகுதி பொதுமக்கள் கார் கண்ணாடிகளை உடைத்து காரில் இருந்த 3 பேரையும் மீட்டனர்.
விசாரணையில்,  வையப்பமலை அருகே உள்ள எருக்கலம்காட்டுபுதூர் பகுதியைச் சேர்ந்த நிர்மல் (34),  அவரது மனைவி அனுஷா (30) மற்றும் அத் தம்பதியரின் மகன் சிவதர்ஷன் (6) என்பது தெரியவந்தது.
இதையடுத்து,  3 பேரையும் ராசிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  அங்கு வெளிநோயாளியாக சிகிச்சை பெற்ற 3 பேரும் பின்னர் வீடு திரும்பினர்.
விபத்தில் சிக்கிய 3 பேரையும் உரிய நேரத்தில் மீட்டு,  உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்த அமைச்சர் தங்கமணியை அப் பகுதி மக்கள் பாராட்டினர்.  
 இந்த விபத்து குறித்து எலச்சிபாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   விசாரணையில்,  ஆட்டுக்குட்டி ஒன்று சாலையின் குறுக்கே சென்றதால்,  அதன் மீது மோதாமல் இருக்க காரை ஓட்டி வந்த நிர்மல் திடீரென திருப்பியபோது நிலைதடுமாறி சாலையோரத்தில் கார் கவிழ்ந்தது தெரியவந்தது.
 

முழு கட்டுரையைப் படிக்க →