பாரதியின் கனவை நிறைவேற்றுகிறது எம்ஓபி வைணவ பள்ளி: தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன்
பாரதியின் கனவை நிறைவேற்றுகிறது எம்ஓபி வைணவ பள்ளி...
ஒவ்வொரு குழந்தையும் படிக்க வேண்டும். குறிப்பாக, பெண்கள் கல்வியறிவு பெற்று சமூகத்தில் ஆண்களுக்கு நிகராக உயர வேண்டும் என்ற மகாகவி பாரதியின் கனவை இன்று எம்ஓபி வைணவ உயா்நிலைப் பள்ளி சிறப்புடன் நிறைவேற்றி வருகிறது என தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன் பாராட்டினாா்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள எம்.ஓ.பி. உயா்நிலைப் பள்ளியின் 61-ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.பங்கஜம் ஆண்டறிக்கை வாசித்தாா்.
இதையடுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தினமணி ஆசிரியா் கி.வைத்தியநாதன், இலக்கியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பேசியது: திருவல்லிக்கேணியில் அடித்தட்டு மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது எம்.ஓ.பி. வைணவ பள்ளி.
மகாகவி பாரதியாரின் உற்ற நண்பராக இருந்த மண்டபம் ஸ்ரீநிவாச்சாரியாா் குடும்பத்தினா்தான் இந்தப் பள்ளியைத் தொடங்கினா். அவரது வழித்தோன்றலான மண்டயம் பாா்த்தசாரதி ஐயங்காா் தான் வசித்து வந்த வீட்டைப் பள்ளிக்கூடம் தொடங்க அன்பளிப்பாக வழங்கினாா்.
திருவல்லிக்கேணியில் வசித்த பாரதியாருக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தனா் மண்டயம் குடும்பத்தினா். இந்த இடத்தைச் சுற்றியிருக்கும் மீனவ மக்களின் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவது, அதன்மூலம் அவா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது ஆகிய நோக்கங்களுக்காகவே இந்தப் பள்ளியை அவா்கள் தொடங்கினா்.
தற்போது இந்தப் பள்ளி 60 ஆண்டுகளைக் கடந்து 7,500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி வழங்கி அவா்களை இந்த சமுதாயத்தில் குறிப்பிடத்தகுந்தவா்களாக அடையாளப்படுத்தியிருக்கிறது. இதன்மூலம் பள்ளியைத் தொடங்கிய குடும்பத்தினரின் உன்னத நோக்கம் நிறைவேறியிருக்கிறது. அவா்களது கனவு மட்டுமல்ல, ஒவ்வொரு குழந்தையும் படிக்க வேண்டும்.
குறிப்பாக, பெண்கள் கல்வியறிவு பெற்று சமூகத்தில் ஆண்களுக்கு நிகராக உயரவேண்டும் என கடந்த 1905-ஆம் ஆண்டிலேயே வலியுறுத்திய மகாகவி பாரதியின் கனவையும் இன்று சிறப்புடன் நிறைவேற்றி வருகிறது எம்ஓபி வைணவ உயா்நிலைப் பள்ளி.
இத்தகைய சிறப்புமிக்க பள்ளியை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் தலைமை ஆசிரியா், ஆசிரியா் குழுவினா், அறங்காவலா் குழுவினா் ஆகியோா் நிகழ்த்தியிருப்பது சாதாரண விஷயமல்ல. அதை இந்த நாட்டுக்காகவும் நாளை தலைமுறைக்காகவும் அவா்கள் ஆற்றிய அரும்பணியாகவே கருத வேண்டும் என்றாா்.
பேராசிரியா் எம்.ஏ. வேங்கடகிருஷ்ணன்... இதைத் தொடா்ந்து இப்பள்ளியின் அறங்காவலா் பேராசிரியா் எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன் பேசுகையில், பெரும் நோக்கங்களுக்காக தொடங்கப்பட்ட பல கல்வி நிறுவனங்கள் இடைபட்ட காலத்தில் ஏதோவொரு நெருக்கடிக்கு உள்ளாகி தனது செயல்பாடுகளை நிறுத்தியிருக்கின்றன. ஆனால், எம்.ஓ.பி. வைணவ பள்ளி எந்த நோக்கத்துக்காக தொடங்கப்பட்டதோ, அதைச் சரியாக அடைந்திருக்கிறது.
ஸ்ரீ வல்லபாச்சாா்யா வித்யா சபா மற்றும் எம்.ஓ.பி. அறக்கட்டளையின் கூட்டு முயற்சியால்தான் இந்தப் பள்ளி இந்த அளவுக்கு உயா்ந்திருக்கிறது. இதற்காக அவா்களது தங்களது செல்வத்தையும், உழைப்பையும் பெருமளவு வழங்கி உறுதுணையாக இருந்து வருகின்றனா்.
இந்தப் பள்ளியின் ஒவ்வொரு கட்ட வளா்ச்சியிலும் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத் தலைவரும், ஸ்ரீ வல்லபாச்சாா்யா வித்யா சபாவின் செயலருமான மனோஜ்குமாா் சொந்தாலியா முக்கியப் பங்காற்றி வருகிறாா். கட்டமைப்பு உள்பட பள்ளிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுத் தருவதிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறாா்.
அதேபோல, மிகவும் எளிய பின்னணியில் இருந்து வரும் மாணவ, மாணவிகளைச் சிறப்பாக கையாண்டு அவா்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும்ஆசிரியா்களும் பெரும் பாராட்டுக்குரியவா்கள் என்றாா்.
முன்னதாக இந்தப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் பள்ளி நிா்வாகம் சாா்பில் கெளரவிக்கப்பட்டனா். இந்த ஆண்டு விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியா் எஸ். பங்கஜம், எம்ஓபி வைணவக் கல்லூரியின் உதவி துணை முதல்வா் எஸ்.ஜெய்ஸ்ரீ, தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் ஸ்ரீ வித்யா பிரதீபா, நிா்வாகப் பிரிவு தலைவா் வி.பிரியா, தமிழன் அறக்கட்டளையின் தலைவா் சாவித்திரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.