பிரமிப்பை ஏற்படுத்தும் சாதனைகள்! - தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நான்கரை ஆண்டு கால சாதனைகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன என்றார் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்.
சென்னை, மார்ச் 11: "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நான்கரை ஆண்டு கால சாதனைகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன' என்றார் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 73- ஆவது பிறந்த நாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாழ்த்தரங்கத்தில் அவர் பேசியதாவது:
கடந்த ஐந்தாண்டுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை நிகழ்ச்சிகளைத் தவிர்த்து 1,725 நாள்களில் 8,585 நிகழ்ச்சிகளில் 173 முறை பயணித்து பங்கேற்றுள்ளார். தமிழக மாவட்டங்களில் அரசு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று 44 லட்சத்து 44 ஆயிரத்து 721 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
மேலும் 15,000 அரசுக் கோப்புகளில் கையொப்பமிட்டுள்ளார். தமிழகத்தில் தொழில் தொடங்க 1,229 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.12 லட்சம் கோடிக்கு தொழில் முதலீடு பெறப்பட்டு, 35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால், தமிழகம் உள்நாட்டு உற்பத்தியில் 11.19 சதவீதம் என்ற இரு இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது.
வீடு தேடி மருத்துவம் திட்டத்தில் 2.50 கோடி பேர் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் 37,000 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு 20 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர். இந்திய அரசுப் பணியில் அரசுப் பள்ளி மாணவர் தேர்ச்சி பெற்றதற்கு "நான் முதல்வன்' திட்டமே காரணமாகும். அவரது நான்கரை ஆண்டு ஆட்சியின் சாதனைப் பட்டியல் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து' என வள்ளுவர் கூறுவதைப் போல எதை யாரிடம் ஒப்படைப்பது என்பதை நன்கு அறிந்தவர் முதல்வர். ஆகவேதான் அவர் இந்து சமய அறநிலையத் துறையை பி.கே.சேகர்பாபுவிடம் ஒப்படைத்துள்ளார். கடந்த நான்கரை ஆண்டில் தமிழகத்தில் பாழடைந்த கோயில்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. அதில் 4,000 கோயில்களில் குடமுழுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.8,000 கோடி மதிப்புள்ள நிலங்களை மீட்டு அந்தந்தக் கோயில்களில் ஒப்படைத்துள்ளார்.
மூத்தோரை மதிக்கும் முதல்வரின் பண்பு பாராட்டத்தக்கது. எந்த மாவட்டத்துக்குச் சென்றாலும், அங்கிருக்கும் மூத்த திமுக தலைவர்களை நேரில் சென்று நலம் விசாரிக்கும் அவரது செயல்பாட்டைப் பார்த்து அவர்கள் வியந்து மகிழ்கிறார்கள். கட்சியில் இருந்து விலகி பல விமர்சனங்களை முன்வைத்த நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டைப் போற்றும் விதத்தில் அவருக்கு சிலை நிறுவ முற்பட்டதை பாராட்டாமல் இருக்க முடியாது என்றார் அவர்.