முகப்பு
நாமக்கல்

கொந்தளம் மகா மாரியம்மன் கோயிலில் மகா நவசக்தி யாகம்

கொந்தளத்தில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோயிலில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு மகா நவசக்தி யாகம், லட்சார்ச்சனை

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

கொந்தளத்தில் எழுந்தருளியுள்ள மகா மாரியம்மன் கோயிலில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு மகா நவசக்தி யாகம், லட்சார்ச்சனை, 108 வலம்புரி, 108 இடம்புரி சங்காபிஷேகம் மற்றும் 1,008 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு யோகி விநாயகர் வழிபாடும், காலை 9 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி 1,008 பால் குடங்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்டு கோயிலை வந்தடைந்தனர்.
காலை 9.30 மணிக்கு புண்யாகம், சங்கு ஸ்தாபனம், கும்ப அலங்காரம், அத்யாய நவசக்தி யாகம், அக்னி காரியம் மற்றும் 108 திரவிய ஹோமமும் நடைபெற்றது. 9.55 மணிக்கு மகா மாரியம்மனுக்கு 1,008 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு மேல் மகா பூர்ணாகுதி, மகா தீபாராதனை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு, சங்கு புறப்பாடு, விநாயகர், மருந்தீஸ்வரர், அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு 108 வலம்புரி, 108 இடம்புரி சங்காபிஷேகமும், கலசா அபிஷேகமும் நடைபெற்றன. பின்னர் வெள்ளிக் கவச அலங்காரம், கோ பூஜை, அஸ்வ பூஜா, மகா தீபாராதனை மற்றும் 9 கன்னிப் பெண்களுக்கு அன்னதானம் வைத்து பூஜை செய்யப்பட்டது.
மாலை 4 மணிக்கு காளியம்மன், இறைநேசர் ஆகியோருக்கு கலசா அபிஷேகம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு மேல் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி, திருஊஞ்சல் உற்சவம் மற்றும் நவசக்தி யாகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கொந்தளம் மகா மாரியம்மன் கோயில் சித்ரா பெளர்ணமி விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதேபோல் பரமத்தி வேலூர் செட்டியார் தெருவில் உள்ள ஐயப்பன் கோயில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து கோயில்களிலும் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு அலங்காரங்களும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றன.
 

முழு கட்டுரையைப் படிக்க →