துளிர் அறிவியல் தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்குப் பாராட்டு
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய துளிர் அறிவியல் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய துளிர் அறிவியல் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க நாமக்கல் மாவட்ட கிளை சார்பில் தேசிய அறிவியல் தின விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான துளிர் அறிவியல் தேர்வு அண்மையில் நடைபெற்றது. இதில் 1,370 மாணவர்கள் பங்கேற்றனர்.
துளிர் தேர்வில் பங்கேற்று பள்ளி அளவில் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, ராசிபுரம் பாரதிதாசன் சாலை, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கைலாசம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர் பரத், மாவட்ட அளவில் முதலிடம் பெற்று தொலைநோக்கியையும், வடக்குபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவி கெளசிகா மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்று எளிய நுண்ணோக்கியையும், திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர் ராகுல் மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்று பைனாகுலரையும் பரிசாகப் பெற்றனர்.
மேலும் நாமக்கல் காமராஜர் மெட்ரிக். பள்ளி மற்றும் கருமாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஆறுதல் பரிசையும், பேளுக்குறிச்சி கலைமகள் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சிறப்பு பங்களிப்புக்கான பரிசையும் பெற்றனர்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக ராசிபுரம் ரோட்டரி சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் சிவக்குமார், பாலவெங்கடமணி, அறிவியல் இயக்க நிர்வாகிகள் மணிராஜா, பழநிவேல், துரைசாமி, தெய்வசிகாமணி ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலர் சுரேந்தர், ஒருங்கிணைப்பாளர் பாரதி ஆகியோர் செய்திருந்தனர்.