சிப்ஸ் ரக மரவள்ளிக்கிழங்கின் விலை உயர்வு
பரமத்திவேலூர் வட்டத்தில் சிப்ஸ் தயாரிப்பதற்கான மரவள்ளிக்கிழங்கின் விலை உயர்ந்துள்ளது.
பரமத்திவேலூர் வட்டத்தில் சிப்ஸ் தயாரிப்பதற்கான மரவள்ளிக்கிழங்கின் விலை உயர்ந்துள்ளது.
பரமத்திவேலூர் வட்டத்தில் எஸ். வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.
இப் பகுதிகளில் விளையும் மரவள்ளிக் கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலையில் மரவள்ளிக் கிழங்கிலிருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.
மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். சிப்ஸ் தயாரிப்பதற்காக அதிக அளவில் வியாபாரிகள் கேரள மாநிலத்திற்கு வாங்கி செல்வதால் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.
கடந்த வாரம் சிப்ஸ் ரக மரவள்ளிக்கிழங்கு, டன் ஒன்று ரூ. 8 ஆயிரத்துக்கு விற்பனையானது. நிகழ் வாரம் சிப்ஸ் ரக மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ. 8 ஆயிரத்து 800-க்கு விற்பனையாகிறது. கிழங்கு ஆலைகளுக்கு வாங்கிச்செல்லப்படும் மரவள்ளிக்கிழங்கு, டன் ஒன்று கடந்த வாரம் ரூ. 6 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. இந்த வாரம் ரூ.6 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.