திருச்செங்கோட்டில் கார்-ஆட்டோ மோதல்: 5 மாதக் குழந்தை பலி
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் புதன்கிழமை மினி ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 5 மாதக் குழந்தை உயிரிழந்தது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் புதன்கிழமை மினி ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 5 மாதக் குழந்தை உயிரிழந்தது.
பெருங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் தனது மனைவி பரிமளம் (23), 5 மாதங்களே ஆன தனது இரட்டைக் குழந்தைகளான கபிலேஷ், கமலேஷ் மற்றும் பரிமளத்தின் தாய் விஜயா ஆகியோரை தனியார் மருத்துவமனைக்கு ஒரு மினி ஆட்டோவில் ஏற்றி, திருச்செங்கோடு அனுப்பியுள்ளார். ஆட்டோவில் இடமில்லாததால் மினி ஆட்டோவை தனது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்தார். ஆட்டோவை பெருங்குறிச்சியை சேர்ந்த சின்ராஜ் ஓட்டினார்.
வாலரைக்கேட் பகுதியில் ஆட்டோ சென்ற போது, பின்னால் வந்த கார் தனது கட்டுப்பாட்டை இழந்து மினி ஆட்டோவின் மீது மோதியது. இதில், நிலைதடுமாறிய மினி ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், 5 மாத ஆண் குழந்தை கமலேஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மினி ஆட்டோவில் இருந்த விஜயா, ஓட்டுநர் சின்ராஜ், பரிமளம் ஆகிய மூவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காரை ஓட்டிவந்த பிரிதியைச் சேர்ந்த மாணிக்கத்தைக் கைது செய்த திருச்செங்கோடு நகர காவல் துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.