முகப்பு
நாமக்கல்

விவசாயிகள் வெளிநடப்பு;  கூட்ட அரங்குக்கு வெளியே முழக்கம்: நாமக்கல்  குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரியும்,  அரசு அறிவித்த ஆதார விலையை வழங்க மறுக்கும் தனியார் சர்க்கரை

Updated On : 29 மார்ச், 2018 at 8:12 AM
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரியும்,  அரசு அறிவித்த ஆதார விலையை வழங்க மறுக்கும் தனியார் சர்க்கரை ஆலை மீது நடவடிக்கையெடுக்கக் கோரியும் குறைதீர் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.   கூட்ட அரங்குக்கு வெளியே திரண்டு முழக்கம் எழுப்பியதால், ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 
  நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 
 கூட்டத்தில் பேசிய கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி தங்கவேல்,  தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக தனியார் சர்க்கரை ஆலைகள் அரசு அறிவிக்கும் ஆதார விலையை வழங்குவதில்லை.  24 தனியார் சர்க்கரை ஆலைகள் சுமார் ரூ.1,433 கோடி அளவுக்கு விவசாயிகளுக்கு வழங்காமல் நிலுவை வைத்துள்ளன. 
     நாமக்கல் மாவட்டம்,  பள்ளிபாளையத்தில் தனியார் சர்க்கரை ஆலை ரூ.65 கோடி அளவுக்கு விவசாயிகள் தர வேண்டிய பணத்தை வழங்கமால் நிலுவை வைத்துள்ளது.  ஆலை நிர்வாகத்துடன் கடந்த 4 ஆண்டுகளாக பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில்,  விவசாயிகளுக்குத் தர வேண்டிய டன்னுக்கு ரூ.1,200 நிலுவைத் தொகையில் ரூ.300 மட்டுமே தர முடியும் என்றும்,  இதனை விவசாயிகள் ஏற்றுக்கொண்டால் ஒரே தவணையில் வழங்குவதாகவும் கூறுகிறது. 
  இதனால் அரசு அறிவித்த விலையை வழங்க மறுக்கும்,  தனியார் சர்க்கரை ஆலை மீது வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றார். 
    இவரைத் தொடர்ந்து பேசிய நல்லாக்கவுண்டர்,  12 மாவட்டங்களின் விவசாயம் 20 மாவட்டங்களின் குடிநீர் இவற்றின் ஆதாரம் காவிரி ஆறு,  மத்திய அரசு உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துச் செயல்படுத்த வேண்டும்.    இதற்காக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார். 
  இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு செய்வதாக அறிவித்த அவர்,  விவசாயிகள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
    இதனைத்தொடர்ந்து,  90 சதவீத விவசாயிகள் கூட்ட அரங்கிலிருந்து வெளியேறினர்.   கூட்ட அரங்குக்கு வெளியில் திரண்ட விவசாயிகள்,  கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.  இந்தப் போராட்டம் சுமார் 5 நிமிடம் வரை நீடித்தது.  இதனையடுத்து,  அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸார்,  விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே அழைத்துச் சென்றனர். 
      போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கூடுதல் எஸ்.பி.  எஸ்.செந்தில் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் ஆட்சியர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டு,  ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.