நாமக்கல்

தேர்தல்: 10,647 பேருக்கு நாளை பணி ஆணை வழங்கல்

DIN

மக்களவைத் தேர்தலையொட்டி, நாமக்கல் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் 10,647 அலுவலர்களுக்கு புதன்கிழமை பணி ஆணை வழங்கப்படுகிறது.
நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளும் 136 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 717 இடங்களில் 1,653 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி, 3,854 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 2,022 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 2,124 ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களும் (விவிபேட்) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், வாக்குச் சாவடிக்கு தேவையானவை என கணக்கிட்டால் 3,306 வாக்குப் பதிவு இயந்திரங்களும், தலா 1,653 கட்டுப்பாட்டு மற்றும் விவிபேட் இயந்திரங்களும் போதுமானவை. அவசர தேவை கருதி கூடுதல் இயந்திரங்களும் தயாராக உள்ளன.
இந்த தேர்தல் பணியில், நுண்பார்வையாளர், மண்டல அலுவலர், வாக்குச் சாவடி அலுவலர் நிலை-1 முதல் 4 வரையிலான ஊழியர்கள், இதர பணியாளர்கள் என 10,647 பேர் பணியில் ஈடுபடுகின்றனர். ஏற்கெனவே இவர்களுக்கு வாக்குச் சாவடி மற்றும் இயந்திரங்கள் தொடர்பாக மூன்று கட்டப் பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை (ஏப். 17) காலை 9 மணியளவில், பணி நியமன ஆணை வழங்கப்பட்டு, எந்தெந்த வாக்குச் சாவடிக்கு செல்ல வேண்டும்,  இயந்திரங்கள் ஒதுக்கீடு போன்றவை கணினி குலுக்கல் முறையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. போலீஸார், முன்னாள் படைவீரர்கள், ஓய்வுபெற்ற காவலர்கள், தேசிய பாதுகாப்புப் படை மாணவர்கள், ஊர்க்காவல் படையினர், எல்லை பாதுகாப்புப் படை (சி.ஆர்.பி.எப்) வீரர்கள் என 2,200 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.
புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, ஒரு மண்டலத்துக்கு ஒரு சரக்கு வாகனம் என்ற அடிப்படையில், 136 சரக்கு வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாகனங்கள், வாக்குப் பதிவு இயந்திரங்களையும், வாக்குச் சாவடி அலுவலர்களையும் அழைத்து செல்வதுடன், தேர்தல் நாளன்று மாலை 6 மணிக்கு மேல் அந்த இயந்திரங்களை பாதுகாப்புடன் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒப்படைக்கும் வரையில் பயன்பாட்டில் இருக்க அதன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
மேலும், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் புதன்கிழமையன்று மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், மாதிரி வாக்குச் சாவடி ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதற்காக நாமக்கல் கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு சாவடி தேர்வாகியுள்ளது. வாக்குச் சாவடியில் பயன்படுத்தக்கூடிய ஆவணங்கள், சீல், கையில் வைக்கும் மை, இயந்திரங்களை மறைக்கும் அட்டைப் பெட்டி உள்ளிட்டவை சாக்குகளில் கட்டப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT