நாமக்கல்

கொல்லிமலையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வனக் குடில்கள்!

எம்.மாரியப்பன்

கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், அதன் நுழைவாயில் பகுதியான சோளக்காட்டில் வனத் துறை சார்பில், அனைத்து வசதிகளுடன் கூடிய மூங்கிலால் வேயப்பட்ட தங்கும் குடில்கள் அமைக்கப்
பட்டுள்ளன.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கும் தனி இடம் உண்டு.  அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் வராதபோதும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது.  இங்குள்ள ஆகாய கங்கை, மாசில்லா நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்வதும்,  அங்குள்ள குளிர்ந்த சீதோஷ்ண நிலையை இரண்டு, மூன்று நாள்கள் தங்கியிருந்து அனுபவிப்பதும், இயற்கை சார்ந்த உணவுகள், பழ வகைகளை உண்டு ருசிப்பதும் கொல்லிமலையை நாடி வருவோருக்கு பிடித்தமானவையாகும். கோடை காலத்திலும், ஆண்டுதோறும் நடக்கும் வல்வில் ஓரி விழாவின்போதும் இங்கு சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகம் காணலாம்.  ஒவ்வோர் இடமாகத் தேடி, தேடிச் சென்று பார்ப்பது இம் மலைப்பகுதியின் சிறப்பாகும்.
இவ்வாறான கொல்லிமலையில் சுற்றுலாப் பயணிகளை மேலும் மகிழ்விக்கும் வகையில்,  மூங்கிலால் வேயப்பட்ட வண்ணக் குடில்கள், மாவட்ட வனத் துறையால் வடிவமைக்கப்பட்டுள்ளது.  அதுமட்டுமின்றி,  தங்கும் வகையிலான கட்டடங்களும் வனத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ளன.  சோளக்காடு பகுதியில், ரூ.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள மூங்கில் குடில் மற்றும் கட்டடங்கள் அண்மையில் பயன்பாட்டுக்கு வந்தன.  கொல்லிமலைக்கு வருவோர் இந்த குடில்களில் தங்க ரூ.1,500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.  மூங்கில் குடிலின் உள்பகுதியில் இயற்கை சார்ந்த பொருள்கள் அதிகம் இடம் பெற்றுள்ளன.  குளியலறை,  கழிவறைப் பகுதி மட்டும் ரூ.1.50 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.  இரவு நேரங்களில் மிளிரும் வகையில் வண்ண விளக்குகள் குடிலின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன. 
இதன் பராமரிப்பையும்,  வருவாயையும் பழங்குடியினர் நலச் சங்கம் வசம் ஒப்படைக்க வனத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.  கிடைக்கும் வருவாயைக் கொண்டு குடில்களுக்கு தேவையான பணிகளையும்,  பழங்குடியின மக்களுக்கான வசதிகளையும் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  மேலும், குடில்கள் உள்ள பகுதியில் இயற்கை சார்ந்த உணவகம் அமைக்கவும்,  மகளிர் குழுக்கள் கொல்லிமலையில் விளையும் பொருள்கள் மற்றும் இதர மலைசார்ந்த உணவு பதார்த்தங்கள், உடைகள், மருத்துவ குணமிக்க தைலங்கள் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையும் வனத்துறையால் எடுக்கப்பட்டுள்ளது.  இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆக.2-ஆம் தேதி நடைபெறும் வல்வில் ஓரி விழாவின்போது மூங்கில் குடில் அமைந்துள்ள பகுதிகள் அழகுற காட்சியளிக்கும் என வனத் துறையினர் கூறுகின்றனர்.
இது குறித்து கொல்லிமலை வனச்சரகர் அறிவழகன் கூறியது;  கோடைவாசஸ்தலங்களில் மூங்கில் குடில்கள் என்பது இயல்பாக இருக்கக் கூடியது.  கொல்லிமலையில் அதுபோன்று எதுவும் இல்லையே என்ற குறை இருந்தது.  மாவட்ட வன அலுவலர் இது தொடர்பாகக் கேட்டறிந்து,  மூங்கில் குடில் அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.  அதனடிப்படையில், வனம் சார்ந்த பகுதிகளில் உள்ள மூங்கில்கள் கொண்டு குடில் அமைக்கப்பட்டது.  இதில், இருவர் படுக்கும் வகையிலான கட்டில் வசதி மற்றும் இருக்கைகள் இடம் பெற்றுள்ளன. 
குளியலறை, கழிவறையானது சுமார் ரூ.2 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  வெளிப்பகுதியில் மூங்கில்களும் உள்பகுதியில், மைக்கா போன்ற அட்டையினால் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது.  பத்து அடி உயரத்தில் உள்ள இந்த மூங்கில் குடிலில் மின்சாரம், தண்ணீர், சுடுநீர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.  இங்கு தங்குவதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.1,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  வண்ணபூரணி கூட்டுறவு சங்கம் என்ற  அமைப்பைத் தொடங்கி, இதில் கிடைக்கும் வருவாய் அதில் வரவு வைக்கப்படும்.
சோளக்காட்டிலும், அறப்பளீஸ்வரர் கோயில் அருகிலும் உள்ள தங்கும் விடுதிகள்,  குடில்கள் பராமரிப்புக்கும், பழங்குடியினத்தவரின் மேம்பாட்டுக்குரிய நடவடிக்கைகளுக்கும் இந்த நிதியானது உதவியாக அமையும்.   தற்போது ஒன்றிரண்டு குடில்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.  இதன் வரவேற்பைப் பொருத்தே வரும் நாள்களில் கூடுதலாக உருவாக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT