நாமக்கல்

கம்பனுக்கு விழா எடுப்பது அறப்பணி: இலங்கை ஜெயராஜ்

DIN

கம்பனுக்கு  விழா எடுப்பது மிகப் பெரிய சமுதாயப்  பணியும்,   அறப்பணியும் ஆகும் என்றார் இலங்கை ஜெயராஜ்.
ராசிபுரம்  கம்பன்  கழகம்  சார்பில்  55-ஆம் ஆண்டு கம்பன் விழாவின் முதல் நாள் நிகழ்வு சனிக்கிழமை தொடங்கியது.  விழாவில்,  "கம்பனின் பன்முகம்' எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில்,  இலங்கை ஜெயராஜ் பேசியது:-
சமுதாயத்தில் அறம் வளர  ஒவ்வொருவரும்  ராமாயணம் மட்டுமல்லாமல் ராமர், கம்பர் போன்றவர்கள் குறித்து படிக்க வேண்டும்.இதனால் நினைத்ததை அடைய முடியும். அறிவு, ஞானம் பெருகும். 
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கம்பன் விழா நடத்தப்படுகிறது.  கம்பனுக்கு விழா எடுத்த எவரும் தாழ்ந்ததாக வரலாறு இல்லை. கம்பன் விழா எடுப்பவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்களது தலைமுறை சிறப்படையும். கம்பனுக்கு விழா எடுப்பது என்பது மிகப் பெரிய சமுதாயப்  பணி. இது புகழ் சம்பாதிக்கக் கூடிய பணியோ, கொண்டாட்டம், ஆடம்பரத்துக்கு நடத்தக் கூடியதோ அல்ல. இது அறப்பணி. 
அன்றாட செயல்பாடுகளை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று புத்தியாலும்,  அடுத்து இதயத்தாலும் செயல்படுவோம். புத்தி விஞ்ஞானம், கணிதத்தை வளர்க்கும். இலக்கியம் இதயத்தை விரிக்கும். இன்று விஞ்ஞான வளர்ச்சி எங்கோ போகிறது.
இதனால் சூரியன், சந்திரன், வானமண்டலத்துக்கு சென்று ஆராய்கிறோம்.  இதனால் மகிழ்ச்சியோ, நிம்மதியோ கிடைக்கிறதா என்றால் இல்லை. ஆனால் இலக்கியம் வளரவில்லை; இதயம் விரிவடையவில்லை எனில் என்ன நஷ்டம் என்றால்,நாம் புத்தி மட்டும் உள்ள இதயமில்லா இயந்திரங்களாக மாறி வருகிறோம்.
 விஞ்ஞான வளர்ச்சியால் உலகம் சுருங்கிவிட்டது என்கிறோம். சுருங்கியது உலகம் மட்டுமல்ல. நம் இதயமும் கூடதான். இதனால் மனிதர்கள் தனித் தனியாக பிரிந்து வாழ்கிறோம். பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் கூட தொடர்பு இல்லை. இதனால் அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் அதிகரித்துள்ளன. புத்தி வளர வளர எல்லாவற்றிலும் பிரச்னை.  புத்தி இல்லாதவர்களை மனிதன் என்று சொல்லலாம். ஆனால் இதயம் இல்லாதவர்களை மனிதன் என்று சொல்லமுடியாது. 
வாழ்க்கை முறைக்கு தேவையான நல்ல இதயம் இலக்கியத்தால் மட்டுமே வளரும். நாம் ஒவ்வொருவரும் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளோம். புத்திசாலித்தனத்தால் இயற்கைக்கு மாறாக செயல்படுவதால்,  இயற்கையோடும் போராடத் தொடங்கிவிட்டோம்.   இதனால் நமக்கு எதிரான போரை பஞ்சபூதங்களும் தொடங்கிவிட்டன. இதனால் எப்போதோ ஒரு நாள் நடந்து வந்த பூமி அதிர்வு  இப்போது அடிக்கடி நடைபெறுகிறது. இதனைத்  தடுக்க  இதயத்தை வளர்ப்பது தான் ஒரே வழி. ராமாயணம் போன்ற இதிகாசங்களைப்  படிக்க படிக்க இதயம் வளரும்.இது ஒன்று தான் மனிதம், அறம், தர்மம் வளர ஒரே வழி என்றார்.
விழாவில்  ஸ்ரீலலிதாலயா இசைப் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
பேராசிரியர் குருஞானாம்பிகா  "இல்' என்ற தலைப்பிலும்,  சென்னை த.திருமாறன்  "சொல்'  என்ற  தலைப்பிலும், கி.சிவக்குமார் "வில்'  என்ற தலைப்பிலும் கருத்தரங்கில் பேசினர்.
விழாவில் ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.ரவி, செயலர் கே.எஸ். கருணகர பன்னீர்செல்வம், பொருளாளர் ஜி.தினகர், முன்னாள் தலைவர் சிட்டிவரதராஜன், எஸ்.பிரகாஷ், கம்பன் கழகச் செயலர் கே.பிரேம்குமார்,  புலவர் பெ.பரமேஸ்வரன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT