நாமக்கல்

லாரிகள் வேலைநிறுத்தம்: தமிழகத்தில் ரூ.200 கோடி இழப்பு

DIN

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் அபராதக் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து,  வியாழக்கிழமை நடைபெற்ற லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் சுமார் ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சாலை விதிகளை மீறுபவர்களுக்கான அபராதத் தொகையை,  அண்மையில் மத்திய அரசு அதிகரித்தது.  இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,  குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,  ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது.  இந்தப் போராட்டத்துக்கு, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்தது.  
அதன்படி,  தமிழகம் முழுவதும் சுமார் 4.50 லட்சம் லாரிகள் காலை 6 முதல் மாலை 6 மணி வரை ஓடவில்லை.  இதனால், பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படும் வேளாண் விளைபொருள்கள்,  இரும்புக் கம்பிகள்,  இயந்திரங்கள்,  ஜவ்வரிசி,  முட்டை, கட்டுமானப் பொருள்கள்,  தானிய வகைகள்,  காய்கறிகள் உள்ளிட்டவை  தேக்கமடைந்தன.
நாமக்கல் மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படுகின்றன. வேலை நிறுத்தத்தால் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலக வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன.   
இதுகுறித்து,  மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் முன்னாள் பொருளாளரும், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தற்போதைய பொருளாளருமான சீரங்கன் கூறியது:  புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களால்,  அபராத கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.  அதனைக் குறைக்க வலியுறுத்தியே வியாழக்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.  தமிழகம் முழுவதும் சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயங்காததாலும், பொருள்கள் தேக்கத்தாலும் ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம்.  நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை.  இதனால் ரூ.20 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கும்.  மத்திய அரசு உடனடியாக உயர்த்திய அபராதக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT