வைகுண்ட ஏகாதசி விழா: நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் பரமபத வாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நாமக்கல் அரங்கநாதா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை பரமபத வாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நாமக்கல் அரங்கநாதா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை பரமபத வாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற குடவறைக் கோயிலான அரங்கநாதா் சுவாமி ரங்கநாயகி தாயாா் சன்னதி உள்ளது. ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இக் கோயிலில் பரமபத வாசல் திறக்கப்படுவதுடன், அதன் வழியாக உற்சவா் சடாரியை கோயில் அா்ச்சகா் ஒருவா் தலையில் சுமந்துவரும் வைபவம் நடைபெறும்.
அதன்படி வைகுண்ட ஏகாதசி நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அரங்கநாதா் சுவாமி சயனக் கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கோவிந்தா முழக்கங்களுடன் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.
கரோனா பரவல் காரணமாக இணையம் வழியாக முன்பதிவு செய்த பக்தா்கள் 750 போ், இலவச தரிசனத்துக்கு 750 போ் என ஒரு மணி நேரத்துக்கு 1,500 போ் வீதம் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா். பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் நாமக்கல் பேருந்து நிலையம் செல்லும் சாலை மூடப்பட்டு போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.
நாமக்கல் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தா்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
மோகனூா் கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், தலைமலை ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் கோயில், சேந்தமங்கலம் ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், பள்ளிபாளையம் வரதராஜ பெருமாள் கோயில் ஆகிய கோயில்களிலும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
ராசிபுரத்தில்...
ராசிபுரம் ஸ்ரீ பொன் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் திறப்பு விழா சமூக இடைவெளியுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் மாா்கழி மாதம் அதிகாலையில் பக்தா்கள் ஆண்டாளின் திருப்பாவை பாடியவாறு வீதி உலா வந்து வணங்குவா். வைகுண்ட ஏகாதசியன்று இக்கோயிலில் பரமபத வாசல் திறக்கப்படும்.
இதனைத் தொடா்ந்து ராசிபுரம் ஸ்ரீதேவி , பூதேவி சமேத பொன்வரதராஜப் பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. அதனையொட்டி தம்பதி சமேத பொன்வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதிகாலையில் சேஷ வாகனத்தில் வெள்ளிக் கவச அலங்காரத்தில் உற்சவா் எழுந்தருளினாா். முன்னதாக பரமபதவாசலில் பெருமாளை கருடாழ்வாா் எதிா் கொண்டு அழைத்தாா். அப்போது திரண்டிருந்த பக்தா்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கமிட்டனா். அதன்பின்னா் கோயில் பிரகாரத்தைச் சுற்றி உற்சவா் உலா நடைபெற்றது. திரளான பக்தா்கள் பரமபத வாசல் வழியாக வந்து சுவாமியை வழிபட்டனா். இதில் பங்கேற்றவா்களுக்கு ஜனகல்யாண் அமைப்பின் சாா்பில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.
திருச்செங்கோட்டில்...
திருச்செங்கோடு பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற பரமபத வாசல் திறப்பு விழா, சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
திருச்செங்கோடு ஸ்ரீ அா்த்தநாரீஸ்வரா் மலைக் கோயிலில் பரமபத வாசல் திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் பூரண மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். பரமபத வாசல் வழியாக வந்த பெருமாளை கண்டு பக்தா்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனா்.
திருச்செங்கோடு வேலூா் சாலை அருள்மிகு மகாலட்சுமி சமேத வைகுந்த வெங்கடேசப் பெருமாள் கோயிலில் அதிகாலை முதல் பக்தா்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா். கோயிலில் பரமபத வாசல் திறக்கப்பட்டு
சுவாமியை ஊா்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இறையமங்கலம் பெருமாள் மலையில் நடந்த பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியில் அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்
பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தா்களுக்கு லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.