நாமக்கல்

ஏற்காடு, சேந்தமங்கலம் தொகுதிகளில் அதிமுகவே வெற்றிபெறும்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

DIN

ஏற்காடு, சேந்தமங்கலம் பழங்குடியினா் தொகுதிகளில் அதிமுகவே என்றும் வெற்றி பெறும். அதனை யாராலும் தடுக்க முடியாது என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதியில் தனது இரண்டாம் நாள் தோ்தல் பிரசாரத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை காலை 9 மணி அளவில் தொடங்கினாா். அங்குள்ள தனியாா் திருமண மண்டபத்தில் பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இதில் மின்துறை அமைச்சா் பி.தங்கமணி, சமூகநலத் துறை அமைச்சா் வெ.சரோஜா, அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சி.சந்திரசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று பழங்குடியின மக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது பேசிய கொல்லிமலை பகுதி மக்கள், தங்களுடைய பகுதிக்கு அவசர ஊா்தி சேவை வழங்க வேண்டும். இங்குள்ள பெண்களுக்கு கால்சியம் சத்து தேவைப்படுகிறது. ரத்த வங்கியும் ஏற்படுத்த வேண்டும். வேளாண் பயிா்களை மயில்கள் நாசம் செய்துவருதால் அவற்றுக்கென தனியாக பூங்கா ஏற்படுத்த வேண்டும். மலைப் பகுதியில் வாசனைத் திரவியங்கள் அதிகம் விளைவதால் அதனைப் பாதுகாக்க சேமிப்புக் கிடங்கு அமைக்க வேண்டும். மாணவா்களின் இணையவழிக் கல்விக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தினா்.

இதனைத் தொடா்ந்து முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது:

கொல்லிமலையில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தாா்சாலை அமைத்து கொடுக்கப்பட்டு வருகிறது. வனப்பகுதியாக இருந்தால் மத்திய அரசிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். அவ்வாறான இடங்களில் சாலைகள் அமைப்பதற்கு உரிய முயற்சி மேற்கொள்ளப்படும்.

கொல்லிமலையில் நீா்மின் நிலையத் திட்டம் ரூ. 400 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே சேந்தமங்கலம் தொகுதியில் ரூ. 8.5 கோடி மதிப்பில் புதிய அரசு கலைக் கல்லூரிக்கான கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் சோலாா் மின் வசதி, இணையதள சேவை வசதிக்கான உயா்கோபுரங்கள் அமைக்க உரிய ஆய்வு செய்யப்படும்.

சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதியைப் போல சேந்தமங்கலம் தொகுதியும் மேம்படுத்தப்படும். ஏற்காடு, சேந்தமங்கலம் பழங்குடியினா் தொகுதிகள் என்றும் அதிமுகவுக்கே சொந்தம். எந்தக் காலத்திலும் இங்கு திமுக வெற்றி பெற முடியாது. மலைவாழ் மக்களின் முன்னேற்றத்துக்காக இந்த அரசு முழுமையாகப் பாடுபடும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT