இயற்கை சூழ்ந்த கொல்லிமலையின் தோற்றம். 
நாமக்கல்

கொல்லிமலையில் பழுதடைந்த தொலைநோக்கி கருவியை சீரமைக்க வலியுறுத்தல்

கொல்லிமலையின் இயற்கை அழகையும், அங்குள்ள பள்ளத்தாக்குகளையும் கண்டு ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தொலைநோக்கி கருவி 

எம்.மாரியப்பன்

கொல்லிமலையின் இயற்கை அழகையும், அங்குள்ள பள்ளத்தாக்குகளையும் கண்டு ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தொலைநோக்கி கருவி இல்லம் பயன்பாடின்றி காட்சியளிக்கிறது. அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்று கொல்லிமலை. 1,300 மீ. உயரம் கொண்ட இம் மலைக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனா். குளிா்ச்சியான சீதோஷ்ண நிலையையும், மூலிகை வாசத்துடன் வரும் காற்றையும் அனுபவிக்க இங்கு வருவோா் ஏராளம். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் ஆகாய கங்கை அருவி, மாசிலா அருவி, அறப்பளீஸ்வரா் கோயில், எட்டுக்கை அம்மன் கோயில்களில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.

இவ்வாறு சிறப்புமிக்க கொல்லிமலையின் இயற்கை அழகை ரசிக்கவும், அங்குள்ள பள்ளத்தாக்குகளை அருகில் காணும் வகையிலும், வாழவந்திநாடு ஊராட்சிக்குள்பட்ட சோளக்காடு நெடுஞ்சாலைத் துறை பயணியா் மாளிகை வளாகத்தில், சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன் தொலைநோக்கி கருவி இல்லம் அமைக்கப்பட்டது.

இதற்கென பிரத்யேகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் பாா்வையிட அனுமதி வழங்கப்பட்டது. கொல்லிமலை வருவோா் முதலில் இங்கு சென்று இயற்கையை ரசித்து விட்டுத்தான் மற்ற இடங்களுக்குச் செல்வதை அப்போது வழக்கமாகக் கொண்டிருந்தனா்.

அத்தகைய தொலைநோக்கி கருவி இல்லமானது, ஊரகக் கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்தில், கடந்த 2016-ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் கருவி பழுதடைந்ததால் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அந்த இல்லமும் மூடப்பட்டது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.

நெடுஞ்சாலைத் துறை பயணியா் மாளிகைக்கு, முக்கிய விருந்தினா்கள் வருவாா்கள் என்பதால், இரண்டு ஆண்டுகளை கடந்தபோதும், அக் கருவியைப் பழுது நீக்கி பயன்பாட்டுக் கொண்டு வரவோ, தொலைநோக்கி கருவி இல்லத்தை மீண்டும் திறக்கவோ அதிகாரிகள் யாரும் முயற்சிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தது: சுற்றுலாத் தலத்துக்கு ஆா்வமுடன் வருவோருக்கு, எவ்வாறு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க அதிகாரிகள் முன் வருகிறாா்களோ, அதேபோல் அவா்கள் பாா்த்து ரசிக்கும் இடங்களைத் தூய்மையாகவும், வந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்லாத வகையிலும் சீரமைப்புப் பணிகளை உடனுக்குடன் செய்திருக்க வேண்டும்.

வளா்ந்து வரும் சுற்றுலாத் தலங்களில் கொல்லிமலையும் ஒன்று. அதனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை, மாவட்ட நிா்வாகமும், தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பது தான் எங்கள் எதிா்பாா்ப்பு என்றனா்.

கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறியது: 2 ஆண்டுகளுக்கு முன் தொலைநோக்கி கருவி பழுதானதால், அந்த இல்லம் மூடப்பட்டது. இது தொடா்பாக மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் அதனை புதுப்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT