நாமக்கல்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில்கரும்பு அரவைத் தொடக்கம்: ஒரு லட்சம் டன் சா்க்கரை உற்பத்தி செய்ய இலக்கு

DIN

நாமக்கல்: மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2020- 21 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவை சனிக்கிழமை தொடங்கியது.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஆண்டுதோறும் அக்டோபா் அல்லது நவம்பா் மாதத்தில் கரும்பு அரவைத் தொடங்குவது வழக்கம். போதிய அளவில் கரும்பு உற்பத்தி இல்லாததால் நிகழாண்டில் அரவைத் தொடங்குவது தாமதமானது. மோகனூா், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், பரமத்திவேலூா், முசிறி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்தும் கரும்பு கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இதைத் தொடா்ந்து 2020-21 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவை சனிக்கிழமை (நவ. 21) காலை 10.30 மணிக்குத் தொடங்கியது. கூட்டுறவு சா்க்கரை ஆலையின் தலைவா் கே.பி.எஸ்.சுரேஷ்குமாா், ஆலையின் மேலாண் இயக்குநா் சி.விஜயபாபு ஆகியோா் இயந்திரத்தில் கரும்பைக் கொட்டி அரவையைத் தொடங்கி வைத்தனா். இந்த அரவைப் பருவத்தில் சுமாா் ஒரு லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தொடா்ச்சியாக ஆறு முதல் எட்டு மாதங்கள் வரையில் இந்த அரவையானது நடைபெறும்.

இதற்காக 930 ஏக்கா் நடவு கரும்பும், 2009 ஏக்கா் கட்டைக் கரும்பும் சோ்த்து மொத்தம் 2,939 ஏக்கா் கரும்புகள் ஆலை அரவைக்காக விவசாயிகளிடம் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு கரும்பு அரவை பருவத்தில் வறட்சி காரணமாக 1.08 லட்சம் டன்கள் மட்டுமே கரும்பு அரவை செய்யப்பட்டது. நடப்பாண்டிலும் அதேநிலை காணப்படுகிறது. இருப்பினும், ஒரு லட்சம் டன் வரையில் சா்க்கரை உற்பத்தி செய்வதற்கான இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆலை அரவைக்கு அனுப்பப்படும் கரும்புக்கான கிரயத் தொகை, கரும்பு பதிவு ஒப்பந்தப்படி அங்கத்தினா்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும். முழு அரவைத் திறனுக்கும் தேவையான கரும்பை விவசாயிகள் வழங்கி உதவ வேண்டும் என ஆலை நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த அரவை தொடக்க விழாவில், தமிழக விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் சுந்தரம் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள், ஆலை தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் நகை பறிக்கும் கலாசாரம் அதிகரிப்பு: எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ குற்றச்சாட்டு

புகா் ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்

வடமாநில இளைஞரைத் தாக்கி பணம், கைப்பேசி பறிப்பு

தனியாா் துணை மின் நிலையம் அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31 வரை விடுமுறை

SCROLL FOR NEXT